10
வரலாற்றுக்கு முன்
கணக்கிடப்பெறும் மனித வரலாற்றில் ஓர் ஐயாயிரமாண்டுக்கான வரலாறேயாகும்; ஆனால், அந்த வரலாறும் தெளிவு பெற்ற நிலையில் இல்லை.
இத்தகைய குறைந்த அளவில் உள்ள கால எல்லையை ஆராயும் வரலாற்றாசிரியர் எத்தனையோ வகைகளில் மாறுபடுகின்றனர்; தத்தம் கொள்கைகளையே உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினாலே பலப்பல வகையில் தம் எழுத்துக்களை எழுதி வைக்கின்றனர். இந்த வரலாற்று எல்லையிலே மொழிப் பூசலும், இனப் பூசலும் பிற பூசல்களும் தலை விரித்தாடுகின்றன. காய்தல் உவத்தல் அகற்றி ஆராய வேண்டுவது எல்லாத் துறைக்கும் உலகில் ஏற்புடைத்து என்றாலும், சிறப்பாக வரலாற்றுத் துறைக்கு அஃது இன்றியமையாததாகும். ஆயினும், சிலர் அந்த நிலைமாறித் தத்தம் கொள்கை வழியே தம் மொழி இனம் இவையே வரலாற்றில் முற்பட்டன என எழுதுகின்றனர். என்றாலும், மேல் நாட்டு ஆய்வாளர் சிலரும் இந்திய வரலாற்றாசிரியரும் உண்மையை உணர்ந்து எழுதுகின்றமையின், ஒரளவு கடந்த ஐயாயிரமாண்டுகளுக்குரிய வரலாற்றைச் சற்றுத் தெளிவாக அறிய முடிகின்றது.
தமிழ் நாட்டு வரலாற்றைப் பற்றியும் வடவிந்திய வரலாற்றைப் பற்றியும் புராண மரபுகளும் பிற கதைகளும் எத்தனை வகையில் கற்பனை செய்து காண்கின்றன! அவற்றை வரலாறு என்றே கொள்ள இயலாது. தென்னாட்டு மொழி, கலை, ஆட்சி அமைப்பை எத்தனை எத்தனையோ ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் கொண்டு செல்கின்ற கதைகள் பலப்பல. அவற்றையெல்லாம் வரலாற்றுக்குத் துணையாகக் கொள்ளின், உண்மை வரலாற்றை உணர இயலாது. அப்படியே வடநாடு பற்றிய வரலாற்றுக் கதைகளுமாம். எனவே, அவற்றை விடுத்துக் கடந்த ஐயாயிரமாண்டுகளில் வடக்கும் தெற்கும் எந்தெந்த வகையில் இணைந்திருந்தன எனக் காண்பதும், அதற்கு முன் அறிவியல் வழியில் கண்ட நிலப்பரப்பும் மக்கள் வாழ்க்கை