பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நந்தரும் மெளரியரும்

175


பெருமை அந்த மோரிய பரம்பரையைச் சார்ந்ததுதானே? இதைக் கொண்டாலும் அவருக்கு இவர் காட்டிய உரை பொருந்தியே தோன்றும். மற்றும், இதே சொல்லுக்குப் பிறவிடங்களில் வரும் பொருள்களையும் நோக்கின், உண்மை தெளிவாகுமல்லவா? மற்றும் ஒரே பாட்டில் நந்தரையும் அவருக்கு மாறுபட்ட மோரியரையும் கொண்டு வந்து காட்டும் மாமூலனார் கருத்து என்ன? நந்தர்களுக்கு வேறு எப்படி உரை காண்பது? மோகூர்ப் பழையன் பணியாமையின் கோசர் மோரியரை அழைத்து வந்தனர் என்ற உண்மையைத் திட்டமாகக் காட்டுகின்றாரே! இதை எக்காரணம் கொண்டு மறைக்க இயலும்?

'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு’

                                         (அகம் 281)

என்று அகநானூற்றிலே இதே மாமூலர் தெள்ளத் தெளிய வடக்கே உள்ள வடுகர் முன்னுற, அவர் பின் தென்திசை வந்த மோரியர் எனக் காட்டுகின்றாரே! இதற்கு என்ன பொருள் கொள்ள முடியும்? எனவே, மோரியர்தம் தென்னாட்டுப் படையெடுப்பு உறுதி எனக் கொள்ளலாகும்.

மற்றொரு காரணம் காட்டியும் இப்படையெடுப்பை மாற்ற நினைப்பர். அதையும் எண்ணிப் பார்க்கலாம். மோரியர் 'கோசர்'களுக்காகத்தானே தமிழ்நாட்டுக்குஅதிலும் சிறப்பாகப் பொதியத்தின் பக்கல் வாழ்ந்த பழையன் நாட்டுக்கு வந்தார்கள் எனவும், ஆனால் கோசரும் பழையனும் நண்பர்களாய் உள்ளார்கள் என மதுரைக்காஞ்சி மூலம் நாம் காண்பதால் அவர்கள் மாறுபடவில்லை எனவும், அவர்வழி மோரியர் படையெடுப்பு இல்லையெனவும் காட்ட முனைவர். மதுரைக்காஞ்சியில் வரும் அடிகள் இவையே :