பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வரலாற்றுக்கு முன்



'பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன

                                 (மதுரைக்காஞ்சி, 508-9)

இவற்றில் கோசர்கள் மோகூர்ப் பழையனுக்கு நண்பர்களாய் இருந்தார்கள் எனக்கொள்ள இடமுண்டாகின்றது. இதனால் கோசருக்கும் பழையனுக்கும் போர் உண்டாகவில்லை என்று கொள்ள முடியுமா? மாமூலனார் காலத்துக்கும் மாங்குடி மருதனார் காலத்துக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாவது கழிந்திருக்க வேண்டும். எனவே, பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் நண்பராய் இருந்த இருவரும் அதற்கு முன்னோ பின்னோ மாறுபடவில்லை என்று யார் கூற முடியும்? இக்காலத்திலும் இவ்வுண்மை நமக்கு நன்கு தெரிகின்றதே! வரலாற்றில் எத்துணைப் பெருமன்னர்கள் ஒருகால் இணைந்து சிறந்தும், அடுத்தொருகால் மாறுபட்டுப் போரிட்டும் வேறுபடுவதைக் காண்கின்றோம்! இன்றும் நேற்று எதிர்க் கட்சியில் இருந்தவர் இன்று மாற்றுக் கட்சியிற்புகுந்து தலைவராதலையும் பழைய கட்சியைப் பழிப்பதையும் காண்கின்றோமே! நேற்றைய நண்பர் இன்றைய பகைவராயும், நேற்றைய பகைவர் இன்றைய நண்பராயும் மாறுதல் அரசியலில் மிக எளிமையாக நடக்கக் கூடியனவேயாகும். இந்த மதுரைக் காஞ்சியின்படி கோசர் பழையனுக்குக் கண்ணும் கவசமும் போன்று அருகிருந்து பிழையா நெறி காட்டும் நாற்பெருங்குழுவென இருந்தார்கள் என்று கொள்ள முடிகின்றது. எனினும், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மாறுபடவில்லை என்று எப்படி கொள்ள முடியும்? எனவே, இதைக்கொண்டு மோரியர் படை எடுப்பு இல்லை என அறுதியிட முடியாது.

எனவே, கி.மு. நான்காம் நூற்றாண்டில், வடக்கே மோரியப் பேரரசு தழைத்த காலத்தில், தமிழகமும் சிறந்து நின்றதென்பதும், தமிழர் புகழும் பண்பும் இமயம்வரை சென்றன என்பதும், சந்திரகுப்தர் நாடு தமிழ்நாட்டு எல்லை வரை இருந்ததென்பதும், அவர் தமிழ்நாட்டின்மேல்