பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

37



'திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி
நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்டார்
அன்னவர்பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன்நீ'

                                      (பரி. 3:54.56)

என்றும் திருமால் கொண்ட பேருருவாம் திரிவிக்கிரம அவதாரத்தைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்னும், இரணியனைத் தடிந்த நரசிங்க அவதாரம் பற்றியும்[1] பரசுராம அவதாரம் பற்றியும்[2], பலராம அவதாரம் பற்றியும்[3]: வராகவதாரம் பற்றியும்[4] வேறுபல புராணக் கதைகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று மட்டும் கண்டு மேலே செல்லலாம்.

'இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல,
                                 
(கலி. 3.8:1-5)

என்று இராவணன் கைலை மலையை எடுக்க நினைத்து முயன்று வெற்றி பெறாது வாடிய நிலையினை நன்றாகப் புலவர் சித்தரித்துக் காட்டுகின்றார். இவ்வாறே பலப்பல இடங்களில் சங்க இலக்கியங்கள் வடநாட்டுக் காப்பியக் கதைகளையும் அவை ஒட்டிய பிற வரலாறுகளையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடல்கள் அனைத்தும் ஒரே காலத்தைச் சேர்ந்தன என்று கொள்ள முடியாதன. கி.மு. ஐந்நூறு தொடங்கியும்—ஏன்?—அதற்கு முன்பும் கி.பி. 300 அல்லது 400 வரையும் பாடப்பட்ட பாடல்களல்லவா?


  1. பரிபாடல், 4:10.21.
  2. அகம், 220:3.9.
  3. பரிபாடல், 2:20.23.
  4. பரிபாடல், 2:16,17.