38
வரலாற்றுக்கு முன்
எனவே, வடநாட்டுக் கதைகளாகிய இராமாயண பாரதங்கள் தமிழில் முழுக்க முழுக்கக் காப்பியங்களாக மொழி பெயர்க்கப்படு முன்பே, அக்கதைகள் பற்றிய குறிப்புக்கள் தமிழ்நாட்டில் நன்கு வழங்கப்பெற்றிருந்தன என்பது தெரிகின்றது.
இவையன்றி ஆரிய அரசன் ஒருவன் பாடியதாகவே குறுந்தொகையில் ஒரு பாட்டு உண்டு. அவன் பெயர் ‘ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்' என்பதாகும். அக்காலத்துச் சிறந்த புலவராகிய கபிலர் குறிஞ்சிப் பாட்டைப் பாடித் தமிழின் இனிமையை ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவித்தார் என்று குறிஞ்சிப் பாட்டின் கடைசிக் குறிப்புக் காட்டுகின்றது. இருவரும் ஒருவராய் இருக்கலாம் என்று கொள்வதில் தவறு இல்லை. சான்றாண்மை மிக்க கபிலர் வழியே தமிழின் இனிமையையும் சிறப்பையும் அத்தமிழர்தம் காதல் வாழ்வையும் கண்டு களித்த அந்த ஆரிய மன்னன், தன்னை மறந்த நிலையிலே அக்குறுந்தொகைப் பாடலைப் பாடியிருப்பான் என்பதில் ஐயமில்லையன்றோ! அப்பாடலும் நல்ல கருத்தை உட்கொண்டு சிறந்ததாய் விளங்குகின்றது. இதோ அந்தப் பாட்டையே உங்கள் முன் வைக்கின்றேன்:
‘அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே,
இதற்குஇது மாண்டது என்னாஅ, அதற்பட்டு
ஆண்டொழிக் தன்றே மாண்டகை நெஞ்சம்;
மயிற்கண் அன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படுஉம் காண லானே.’ (குறுந். 184)
‘கழறிய பாங்கற்குத் தலைவன் சொல்லியது' என்ற தலைப்பில் அந்த ஆரிய அரசன் பாடிய பாடல் எண்ணி எண்ணிப் போற்ற வேண்டிய ஒன்றன்றோ! எனவே, இப்படியே அக்காலத்தில் வடநாட்டவர் பலர் தமிழ் நாட்டுக்கு வந்து