40
வரலாற்றுக்கு முன்
விரும்பவில்லை என்றாலும், ஒரு சிலர் இப்படிப் புதியராய் வடநாட்டவர்தம் வழக்கச் சூழலில் சிக்கி யாகம் செய்ததோடு, அவர்தம் பழக்க வழக்கங்களுள் சிலவற்றையும் மேற்கொண்டார்கள் என அறிகின்றோம். இப்படியே தமிழ் நாட்டு இலக்கியக் கடலுள் மூழ்கிக் காணின், அக்காலத்தில் வடக்கும் தெற்கும் இணைந்த பல காட்சிகளைக் காண முடியும். தொல்காப்பியத்தில் தொட்டதாகக் காணப்பெறும் இந்த இணைப்பு, கடைச்சங்க காலத்தில் நன்கு வளர்ந்து விட்டது என்று கொள்வதில் தவறு இல்லையன்றோ!
இவ்வாறு கதைகளும் பழக்கவழக்கங்களும் மட்டுமன்றி, மலையும், ஆறும், அரசும், பிறவும் சங்க இலக்கியங்களில் எடுத்தாளப் பெறுகின்றன என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. இமயமும் கங்கையும் பேசப் பெறுகின்றன. மோரியரும் நந்தரும் இலக்கியத்தில் எடுத்துக்காட்டப் பெறுகின்றனர். இன்னும் சில வடநாட்டுப் பகுதிகளும் வரலாறுகளும் அன்றே தமிழ் நாட்டில் அறியப்பெற்றனவாய் விளங்கின.
இனி, வடநாட்டுப் பழம்பேரிலக்கியங்களில் தென்னாடு பேசப்படுவதையும் ஒரளவு காணல் பொருத்தமானதாகும். வேதங்களிலும் தென்னாடு விளக்கமாகப் பேசப் பெறவில்லை. ஒரு வேளை இருக்குவேதம் தோன்றிய அந்தக் காலத்தில் தென்னாட்டைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லை என்றாலும், தென்னாட்டு மக்களினத்தவர் வடக்கே இமயம் வரையில் ஆரியர் வரும்போது வாழ்ந்திருந்தார்கள் என்று வரலாற்றாளர் கொள்வதை அறிய வேண்டும். ஆரியர் அத் தென்னாட்டு இனத்தவராகிய கறுப்பரோடு மாறுபட்டுக் கலகம் விளைத்திருக்கின்றனர். பழங்குடிகளைக் கறுப்பர் எனவும் அவர்தம் தலைவனைக் கறுப்பன் (கிருஷ்ணன்) எனவும் பழித்துரைத்தமைக்கு வேதத்தில் பலசான்றுகள் உள்ளன. அவர்கள் இந்திரனை வழிபாடு கடவுளாகக் கொண்டார்கள். கிருஷ்ணன் அல்லது