பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

41


கறுப்பன் அவர்தம் பகைவர் தலைவன். இந்தக் கதையைத்தான் பாகவதம் கண்ணன் இந்திரனுக்கு எதிராகப் போர் தொடுத்துக் குன்றைக் குடையாக்கி, தன் மக்களை இந்திரன் தொல்லையிலிருந்து காத்தான் எனக் கூறுகின்றது போலும்! ஆயினும், அந்த இந்திரனைப் போற்றும் வழக்கம் மெள்ள மெள்ள வடநாடு முழுவதும் பரவியதோடன்றித் தென்னாட்டிலும் புகுந்து, சிலப்பதிகார காலத்தில் சிறந்த விழாவாய்த் தமிழர் கொண்டாடத் தக்க வகையில் வளர்ந்து விட்டதெனக் காண்கின்றோம். எனவே, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்குமுன் புகுந்த ஆரிய மக்கள், தம் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் முதலியவற்றை மெள்ள மெள்ள வடவிந்தியாவிலும் தென்னாட்டிலும் மாறுபாட்டுக்கும் வேறுபாட்டுக்கும் இடையிலும் நெடுநாட்களுக்கு முன்பே பரப்பிவிட்டார்கள் என்பது தெளிவு.

இனி அவர்தம் இராமாயண பாரத காவியங்களிலும் தென்னாடு பேசப்படுகின்றது. வான்மீகியார் தம் இராமாயணத்தே தமிழ்நாட்டைப் பற்றிக் குறிக்கின்றார் என்பதை அறிகின்றோம். சீதையைத் தேட அனுமனைத் தெற்கு நோக்கி அனுப்பிய சுக்கிரீவன், ‘சேர சோழ பாண்டி நாடுகளைக் காணக் கடவீர்கள்,’ என ஆணையிட்டதாக வான்மீகியார் காட்டியுள்ளாராம். மற்றும், பாண்டியர் தலைநகராகிய கபாடபுரத்திலும் காண வேண்டுமென ஆணையிட்டதாகவும் கூறுவர் எனவே, வான்மீகியார் காலத்தில் தமிழ் நாட்டு முடியுடை மூவேந்தர்கள் இருந்தது மட்டுமன்றி, பாண்டியர் தலைநகர் கபாடபுரமாய் இருந்ததெனவும் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, மிகு பழங்காலத்திலேயே வடக்கும் தெற்கும் இலக்கியவழி அறிமுகமானவையாகவே இருந்தன.

வியாச பாரதத்திலும் தமிழ் நாட்டைப் பற்றிக் குறிப்பு வருகிறதாம். அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது பாண்டிய மன்னன் மகளை மணந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.வ.—3