42
வரலாற்றுக்கு முன்
போலும்!அந்தக் கருத்தைத்தான் பெரிதாக்கிப்பின்னாளிலே பிறர் ‘அல்லி அர்ச்சுனன்’ என்ற நாடகமாக்கி மேடையில் நடித்தனர்! மற்றும் தமிழ் வேந்தன் சேரலாதன் பாரதப் போரில் சோறளித்த சிறப்பை நம் இலக்கியங்கள் காட்டிய படி பாரதம் எடுத்துக் காட்டவில்லை என்றாலும், அது பாரதப் போரில் தமிழ் நாட்டு மன்னரின் பங்கு இருந்தது என்பதைக் காட்டுகின்றது என அறிகின்றோம். இவ்வாறே வேறு சில வடமொழிக் காவியங்களிலும் தென்னாடு குறிப் பிடப்படுவதை எடுத்துக் காட்டுவர் அறிஞர்.
இனி, இவ்வாறான இலக்கியங்களேயன்றிச் சில கல்வெட்டுக்களும் வடக்கையும் தெற்கையும் இணைத்துக் காட்டுகின்றன. சிறப்பாக அசோகர் காலத்துக் கல்வெட்டுக்கள் தென்னாட்டை மட்டுமன்றி, ஈழநாட்டையும் வட நாட்டுடன் பின்னிப் பிணைக்கின்றது. அசோகரே இந்திய வரலாற்று எல்லையில் முதன்முதல் விரிந்த நிலப்பரப்பைத் தம் ஆணையின்கீழ் வைத்து ஆண்டவர். ஆயினும், தமிழ்நாடு அவர் ஆணைக்கு உட்படாததாய்த் தனியாகவே உரிமை பெற்று வாழ்ந்தது. அவர் ஆட்சி வடக்கு மைசூர் வரையில் இருந்ததாக மைசூர் நாட்டைச் சேர்ந்த சித்தல் துர்க்கக் கல்வெட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன[1]. அவர் காலத்தில் கிரேக்க உரோம நாட்டு மக்கள் இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் வந்து தங்கினார்கள் என்றும், அவர்களை இந்நாட்டு மக்கள் யவனர்களென வழங்கினார்களென்றும் அவர் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். அவர்கள் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் யவனர்’ என்றே வழங்கப் பெறுவதைக் காண்கின்றோமல்லவா! அலெக்சாந்தர் போர் மேல் விருப்புற்று நாட்டெல்லையைப் பெருக்க வடமேற்குக் கணவாய் வழியே இந்திய மண்ணில் கால் வைக்குமுன்பே, அவர் முன்னோர்கள் கடல் வழியாகத் தமிழ் நாட்டு மேலைக் கடற்கரையில் வந்து தங்கி இரு நாட்டு வாணிப
- ↑ Asoka, by D. R. Bhandarkar, M.A. (Bomb), p 27