இமயமும் குமரியும்
57
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி![1]"
என்னும் சிலப்பதிகார அடிகளின்படி ஆராயின், இக்காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி என்ற பேராறும் குமரி மலையும் பிற மலைகளும் இருந்தன என்பதும், அவை அனைத்தும் ஒரு நீர் ஊழியால் அழிந்து விட்டன என்பதும் நன்கு தெரிகின்றன. அதற்குக் காரணமும் காட்டுகின்றார் ஆசிரியர். அதுபற்றி நாம் இங்கு ஆராயத்தேவையில்லை. பல மலைகளும் ஆறுகளும் குமரிக்குத் தெற்கே இருந்து அழிந்தன என்ற ஒன்றே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இழந்த நாட்டுப்பரப்பைச் சரி செய்வதற்காகவே தென்னவனாகிய பாண்டியன் புதியனவாகத் தோன்றிய இமயத்தையும் கங்கையையும் கொண்டான் என்பதும் தெரிகின்றது. இழந்த அந்தப் பரப்பைக் ‘குமரிக்கண்டம்' என்றே கூறுவர். அதில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என்றும், அவை எழு பகுதிகளாகப் பிரிக்கப் பெற்றிருந்தன என்றும், அப்பகுதியில் தமிழ் மொழி நன்கு வளம்பெற்று நின்றதென்றும் கூறுகின்றனர். அந்தப் பகுதியின் மலைத்தொடர்ச்சியே இன்று சுமத்திரா ஜாவா முதலிய இடங்களில் உள்ளன எனவும் காட்டுவர். அந்தப் பரப்பிலேதான் தமிழ் வளர்த்த முதல், இடைச் சங்கங்கள் இருந்தன என்பர். முதற்சங்கம் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாய் இருந்த பாண்டிய மன்னர் புரக்க, 4440 ஆண்டுகள் தென்மதுரையில் இருந்ததென்றும், இடைச் சங்கம் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாகக் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இருந்ததென்றும், கடைச் சங்கம் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி ஈறாக இக்காலத்து மதுரையில் 1850 ஆண்டுகள் இருந்தது என்றும் இறையனார் களவியல் உரை கூறுகின்றது. இக்கூற்றை அப்
- ↑ சிலப். 11 : 17.22
வ.—4