சிந்து வெளியும் தென்னாடும்
83
முழுவதும் பரவியிருந்தது இந்தியாவில் மட்டுமன்றி, மெசபட்டோமியா, சிறிய ஆசியா, பால்கன் நாடுகள், எகிப்து முதலிய நாடுகளிலும் இச்சத்தி வணக்கம் இருந்து வந்தது. அந்தக் காலத்தில் இச்சத்தி மக்களின் கொடுந்துன்பங்களை நீக்குபவளாய், ஊர்தொறும் மக்கள் வணங்கும் கோயில் பெற்றவளாய் விளங்கினாள். தமிழ் நாட்டில் ஊர்தோறும் இன்றும் கொண்டாடப்பெறும் கிராம தேவதைகளை நாம் அறிவோம். ஊரில் யாதொரு தீங்குவரினும், மக்கள் அவளிடம் முறையிட்டுக் கொள்வதும், அவள் நேரில் வந்து வரந்தந்து நீக்குவதாக நம்புவதும் இன்றும் நாம் காணும் நிகழ்ச்சிகளே. மாரியம்மன் என்றும் பிடாரி என்றும் பல வேறு வகையில் அவள் பாராட்டப் பெற்றிருப்பதையும் நாட்டு வரலாறு காட்டுகின்றது. சிலப்பதிகாரத்தில் இந்தக் கொற்றவை வழிபாடே வேட்டுவ வரியில் விளக்கப் பெற்றுள்ளது. இச்சத்தியே எல்லாத் தெய்வங்களுக்கும் முற்பட்ட தெய்வம் என்னும் உண்மையை இளங்கோவடிகள்,
"அரி, அரன், பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிர்அம் சோதி விளக்காகி யேநிற்பாய்!"
(12: உரைப்பாட்டு மடை, 8)
என்று விளக்குகின்றார். மற்றும் இந்தச்சத்தி பூசை ஆரியர்கள் இந்திய நாட்டுக்கு வருமுன்பே இருந்து வந்த ஒன்று. ஆரியர்தம் வேதத்தில் இச்சத்தி பூசை விளக்கமாகக் கூறப் படவில்லை. இருக்கு வேதத்தில் இரண்டோர் இடங்களில் 'பிருதுவி'யாகிய பூதேவிக்குரியதாக இப்பூசை கூறப்படினும், இஃது அவர்கள் சிந்துவெளி தாண்டிக் கங்கைச் சமவெளியில் வந்து தங்கிய போது அங்குள்ளவர்கள் செய்யும் சத்தி வழிபாட்டைக் கண்டு, பிறகு தங்கள் வேதத்தும் இதை அமைத்துக்கொண்டார்கள் என்பதே பொருந்துவதாகும். அவ்வழிபாடும் நில மகளுக்கு அமைந்த ஒன்றேயன்றி, அனைத்தையும் ஆக்கும் 'சத்தி'க்கு அமைந்ததாகாது. இந்த உண்மையை இன்றும் தமிழ் நாட்டுச் சத்தி வழிபாடு நன்கு