பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வர்ணாஸ்ரமம்


ஒழித்தாகவேண்டும் என்ற விருப்பம் நோயா, எது நோய், என்பது வேறு விஷயம். கலை, மருந்தா விருந்தா, என்பது வேறு விஷயம். அறிஞர் யாவரும், நாட்டை நலியச் செய்த நோய், வர்ணாசிரமம் என்றே கூறினர். வர்ணாசிரமத்தை மித்திரன், நாட்டைவளமாக்கும் வனிதாசிரமமாகக் கருதலாம், மித்ரபலம் பெருக அது ஏதுவாகக் கூடும்: அதுவும் வேறு விஷயமே. வர்ணாசிரமத்தை ஒழிக்கும் எண்ணம், பழங்காப்பியப் படிப்பினால் பாழ்பட்டுவிடும், என்ற கருத்தை மித்திரன் வெளியிட்டிருக்கிறது; உவமைத் தகராறுகளை ஒதுக்கிவிட்டால் இது விளங்குகிறது. இதிலே உள்ள சூட்சமம், என்னைச் சோகிக்கச் செய்கிறது. உண்மையிலேயே, கலை உணர்வு பெருகப் பெருக, தமிழர் என்ற இன உணர்வு அருகுமோ, அண்ணல் சண்முகத்துக்கும் இது நேருமோ, என்றே நான் அஞ்சுகிறேன். சர் சண்முகம், இதுபோது, தமிழ்க் காப்பியமெனும் பூங்காவிலே உலவுகிறார்

என்பதும், அங்குபறித்தெடுத்துத் தொடுத்த அழகிய மாலையினை வசந்த வட்டிலிலே வைத்துத் தமிழருக்குத் தருகிறார் என்பதும், கலாரசிகர்களுடன் கூடிக்குலவி, காவியக்கனி ரசமருந்திக்களிக்கிறார் என்பதும் பிறர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். மித்திரனும் அதனை அறிந்து, "சரி! சரி !! அந்த ரசம் இன்னும் கொஞ்சம் உட்கொண்டால், வர்ணாசிரம ஒழிப்பு என்ற பேச்சு ஒழியும். என்று எழுதுகிறது. இது என்னைச் சிந்தனையிலாழ்த்திற்று. இனி அச்சிந்தனை பற்றிக் கூறுகிறேன். இதுபோது நீவிர் சற்றே உமது சிந்தனையைச் செலவிட வேண்டுகிறேன். மித்திரன் கூறின வாசகத்தின் மர்மம் என்ன?