பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வர்ணாஸ்ரமம்


காண்பர், களிப்பர், மறப்பர்! கவிக்கு, ஆற்றோரத்திலே நாரை நிற்கும் காட்சி, வஞ்சகத்தை மறைக்கும் நடிப்பு, மக்களிலே ஒருசாராரின் மனப்பாங்கையும் நடவடிக்கையையும் நினைவூட்டுகிறது. உவமை கண்டு உளம் களிக்கிறார். இயல்பினால்மட்டுமே உவமையன்று? இடமுங்கூட, ஒன்றாகவே இருக்கும் உவமை அவருக்குத் தோன்றுகிறது. அதே ஆற்றங்கரைகளிலே, செவ்வானம் தோன்றும் வேளையிலே, நாரை போலவே, நினைப்பை நடிப்பால் மறைக்கும் ஒரு கூட்டத்தாரின் குணம் அவருக்கு நினைவிற்கு வருகிறது; ஒரு நேர்த்தியான கவிதையும் பிறக்கிறது, கவிஞரின் உள்ளத்திலிருந்து.


"பொன்மலைசுடர் சேரப்
புலம்பிய விடனோக்கித்
தன்மலைந்துலகேத்தத்
தகைமதியேர்தரச்
செக்கர்கொள் பொழுதினா
னொளி நீவியிள நாரை
முக்கோல்கொள் அந்தணர்
முதுமொழி நினைவார்போ

லெக்கர்மேலிறை கொள்ளு......."

நாரையைக் கண்டதும், பார்ப்பனரின் நினைவு, கவிக்கு! ஆற்றோரத்திலே, அந்திவானத்திலே, நிற்கும் நாரை, மந்திர உச்சாடனம் செய்வதுபோன்ற பாவனை யுடன், நீர்நிலையங்களருகே நித்த நித்தம் அமர்ந்துள்ள, பார்ப்பனரின் உருவம் போன்றிருந்ததாம் கவிக்கு! எந்தக் காலத்துக் கவி? கவித்தொகைகாலம்!! அந்தக்