பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வர்ணாஸ்ரமம்


குளித்து இன்புற வேண்டிவரும் தமிழரைக் கொத்தித் தின்பதன்றி வேறில்லை. கலையருவியே, இக்காரணத்திற்குத் துணையாக நிற்கிறது. கடிவாளத்திற்கு வாய் திறந்த பிறகு, குதீரையின் கொட்டம் அடக்கப்படுவது ஆச்சரியமாகுமா? மூக்கணாங்கயிற்றுக்குச் சம்மதித்த பிறகு, மூலைவாரினால், சாட்டைதானே பேசும்! அதுபோலத்தான், கலையருவியிலே நீந்தி மகிழத் தொடங்கிவிட்டால், ஆரியநாரைகளின் கூரியமூக்கின் வேலையும் தொடங்கும். கலையருவி அங்ஙனமுளது இங்கு. எனவேதான், "சரி, சரி, செட்டியாரே ! கலை உணர்வு பெற்றுவருகிறீர்களல்லவா! அந்த உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கட்டும், பிறகு ஆரிய திராவிடப் போராட்டத்திலே உமக்கிருக்கும் ஆர்வம், பஞ்சாகப் பறக்கிறது. பாரீர்" என்று மித்திரன் கூறுகிறது.

"ஒரே ஒரு செங்கல் பெயர்த்துவிட்டால் போதும்!" என்று கருக்கலிலே நின்று கன்னமிடும் கள்ளன் கூறுவான்.

"கண் சிவந்துவிட்டது. கைகால் துடிக்கிறது. பேச்சும் படபடக்கிறது. இன்னும் ஒரேஒரு கிளாஸ் குடித்துவிட்டால் போதும், ஆசாமி கீழேசாய்வான். பிறகு அகப்பட்டதைச் சுருட்டலாம்" என்று மதுவை ஊற்றி மடியைத் தடவும் தடியர் கூறுவர்.

"இப்போதுதான் என்னிடம் அவருக்குப் பிரேமை அதிகரிக்கிறது. இது இன்னும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும், பிறகு நான் சொன்னபடி ஆடுவார்; சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்தாகவேண்டும் என்று கட்டளையிட்டாலும் தட்டாமல்