பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+38 வல்லிக்கண்ணன்

பக்கத்து ஊர்களுக்கு நடந்து போய்விடக்கூடிய துரத்தில் உள்ள இடங்களுக்கு நாற்று நட, களை பிடுங்க, அறுவடை செய்ய என்று பல ரகமான வேலைகளுக்கும் போய் வந்த ஆண்களும் பெண்களும் பஸ் வந்த பிறகு நடக்கத் தயார்ாக இல்லை. காத்து நின்று, பஸ் பிடித்து சுலபமாகப் போய்வரவே விருப்பம் கொண்டார்கள்.

இந்த மனநிலை மக்களிடம் படிந்துவிட்டபிறகு ஆற்றங் கரைப்பாதையை நாடுவோர் எண்ணிக்கை குறைந்தது. இறுதியில் எவருமில்லை என்றாயிற்று. அதனால் அந்தப் பாதை தூர்ந்து போனது. நடந்து போக முடியாதபடியாகிவிட்டது.

இப்படி எத்தனையோ மாற்றங்கள் ஆற்றில் ஏற்பட்டுள்ளன. தாமிரவரணியில் மட்டும்தான் என்றில்லை. நாடு நெடுகிலும் நீண்டு கிடக்கிற ஆறுகள் பலவும் காட்டுகிற சித்திரங்கள் இப்படித்தான் இருக்கின்றன.

சீர்குலைந்து அழகுகெட்டு அசிங்கமாகிப்போன தாமிர வரணியை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும். ஆற்றுப்படுகையைச் சுத்தப்படுத்தி நீரோட்டத்தை நன்னிலை யாக்கி, கரைகளை அழகுபடுத்தி, வனப்புறுத்தும் சேர்மானங்கள் சேர்த்து மறுமலர்ச்சி உண்டாக்குவது என்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியரும், மக்கள் கலாசார அமைப்பு ஒன்றும் இதில் ஆர்வம் காட்டி னார்கள். பாடிவரும் பரணி என்று வசீகரமான பெயரிட்டு, சுறுசுறுப்பாக வேலைகள் செய்தார்கள்.

(காலஓட்டத்தில் தாமிரவரணியின் பெயரும் தாமிரபரணி என்று மாறிவிட்டதையும் குறிப்பிட வேண்டும்)

ஆனால் சந்தர்ப்பங்கள் சதிசெய்துவிட்டன. கொக்கிர குளம் ஆற்றுப்பகுதி கொலைக்களமாக மாற நேர்ந்தது. உரிமைக்குரல் கொடுத்து, பேரணி நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற உழைப்பாளி மக்கள், காவலர்களின் தாக்கு தலுக்கும் விரட்டல்களுக்கும் ஆளானார்கள். ஒடித் தப்ப முயன்ற பலர் ஆற்றிலிறங்கினார்கள். சாவைச் சந்தித்தார்கள்.

இதன் பிறகு ஆற்றை அழகுபடுத்தும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

நாட்டில் ஒடுகிற அல்லது ஒடுவதாகச் சொல்லப்படுகிற ஆறுகள் அனைத்துக்கும் இப்படித் தனிவரலாறுகள் இருக்கும். பருவ மழை பொய்த்து வருவதால் ஒவ்வொரு வருடமும் மழை சரிவரப் பெய்யாததால் ஆறுகள் வறண்டு கிடப்பது சகஜநிலை ஆகிவிட்டது.