பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 வல்லிக்கண்ணன் கதைகள்

'எனக்கு அடிக்கடி பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படும். கனகாம்பரம், கதம்பம், முல்லை எல்லாம் விற்கும் போது - எல்லோரும் நிறைய நிறையத் தலையில் வைத்திருப்பதைப் பார்க்கிற போது - எனக்கும் ஆசை வரும். ஆனால் காசுக்கு எங்கே போவேன்?’ என்று அவள் தன் மனக் குறையை வெளியிட்டாள்.

'ஏன், என்னிடம் கேட்டிருக்கலாமே...'

'உங்களிடம் எப்படிக் கேட்பது?’ என்று வெட்கத்தோடு இழுத்தாள் அவள்.

'பரவால்லே. இனிமேல் பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறபோது என்னிடம் காசு வாங்கிக் கொள். அழகு தன்னை மேலும் அழகு படுத்திக் கொண்டு கண்ணுக்கு இனிய காட்சியாக விளங்குவது ரசிக்க வேண்டிய விஷயம் தான்' என்று அவர் அளந்தார். அதன் பிறகு, அவ்வப்போது சொக்கம்மா பூவும் தலையுமாகக் காட்சி தருவது இயல்பாகி விட்டது. 'ஏது பூவு?’ என்று சீதை சில சமயம் கேட்பதும், என் சிநேகிதி ஒருத்தி வாங்கினாள். எனக்கும் தந்தாள்’ என்று மகள் சொல்வதும் சகஜமாகி விட்டது.

சிவப்புச் சாந்தும், நைலான் ரிப்பனும், காதுக்கு கோல்டு . கவரிங் நாகரிக அணியும் வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட போதும், சுந்தரமூர்த்தி அவற்றை அன்பளிப்பாக அவளுக்கு வாங்கித் தந்தார்.

'இப்படி எல்லாம் நீங்கள் ஏன் எனக்காகக் காசு செலவு செய்கிறீர்கள்?' என்று சொக்கம்மாள் கேட்டாள்.

சுந்தரம் மகாரகசியத்தை எடுத்துக் கூறுவது போல, மென் குரலில் பேசினார். 'உன் மேலே எனக்கு ஆசை. அதனால் தான்' என்று.

அவ்விதம் அவர் சொன்ன விதமும், பார்த்த வகையும், சிரித்த சிரிப்பும் அவளுக்கு இன்பக் கிளு கிளுப்பு உண்டாக்கின. அவளிடமும் இனம் கண்டு கொள்ள முடியாத பரவச உணர்வு கிளர்ந்து புரண்டது.

அவர் முகத்தையே கவனித்து நின்றவளின் கன்னத்தை சுந்தரம் தன் விரலால் லேசாகத் தட்டினார். மோவாயைப் பற்றி அன்புடன் அசைத்து விட்டு, விரல்கைளைத் தன் உதடுகளில் பொருந்திக் கொண்டார்.

அவர் கைபட்ட இடத்தில் இதமான உணர்ச்சி படர்வதை அவள் உணர்ந்தாள். உள்ளத்தில் குதூகலம் பொங்கியது. காலை இளம் வெளியிலே குளிர் காய்வது போன்ற சுகானுபவம்