பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143 வல்லிக்கண்ணன் கதைகள்

"சுகம்தானா? எப்ப வந்தீர்கள்?" சம்பிரதாய விசாரணை மென்குரலாக உருவெடுத்தது. அவள் பேச்சும் நின்ற நிலையும், உயர்வதும் தாழ்வதுமாக ஊசலிட்ட பார்வையும் அவனுக்கு மகிழ்வளிக்கத் தவறவில்லை.

"நேற்று ராத்திரிதான் வந்தேன். நான் வருவதற்கு நேரமாகி விட்டதால், மாமா அத்தை எல்லோரையும் பார்க்க வரவில்லை. பிறகு வீட்டுக்கு வருகிறேன்” என்று அவன் அறிவித்தான்.

பண்பும் சமூகப் பழக்க வழக்கங்களும் அவளை உந்தித் தள்ள, 'ஊம்! அவசியம் வாங்க. இப்ப நேரமாயிட்டுது. நான் குளிச்சு முழுகி, குடம் விளக்கி, தண்ணீர் எடுத்துக்கிட்டுப் போகணும்" என்று கூறியவாறே வேக நடை நடந்தாள். ஆயினும் அவள் மனம் அவன் பக்கமே சஞ்சரித்தது. அதை அடிக்கடி அவள் திரும்பிப் பார்த்தவாறு நடந்த செயலே உணர்த்தியது.

'காந்தி என்னமாய் - எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள்!' என்று வியந்தவனாய் சந்திரனும் ஆறு நோக்கி நடந்தான். வளராமல் எப்படி இருக்க முடியும்? பருவமல்லவா? இப்போது அவளுக்குப் பதினேழு வயசு இருக்குமே?’ என்று மனம் பெரியதனம் பண்ணியது.

காந்திமதியும் அவன் அழகையும், தன் உள்ளத்தை ஈர்க்கும் உடல் வளர்ச்சியையும் பற்றித்தான் எண்ணியிருக்க வேண்டும். அவனோடு நடந்து, அர்த்தம் உள்ளனவும் அர்த்தமற்றனவுமாய், அவசியத்தோடும் அவசியம் இல்லாமலும் பலப் பல பேசி, பதில் பெற்றுக் காதினிக்க, மனம் இனிக்க, மகிழ்வுற வேண்டும் என்ற ஆசை அவளுக்கு மட்டும் இல்லாமலா போயிற்று? நிறையவே இருந்தது. ஆனால் அவ்விதம் செயல் புரியத் துணிந்தாலோ - பார்க்கிறவர்கள் என்னதான் நினைக்க மாட்டார்கள்? ஊர்க்காரர்கள் எவ்வளவோ பேசுவார்களே? அதற்கெல்லாம் இடம் கொடுக்கலாமா? அஞ்ச வேண்டுவனவற்றை அஞ்சுவதுதானே அறிவுடைமை?

அவள் பண்பு அதை அவளுக்கு உணர்த்தியது. அவனுடைய அறிவு அதையே அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆகவே, அவள்பாட்டுக்கு அவள் வேலையைச் செய்தாள். அவன் தனது அலுவல்களைக் கவனித்தான். ஆனாலும் மனசுக்கு விலங்கு பூட்ட முடியுமா? கண்ணோட்டத்துக்குக் கடுங்காவல் தண்டனை விதிப்பதும் சாத்தியமில்லையே!

சின்ன வயதில் - மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்புகூட காந்தி இப்படியா இருந்தாள்? வாய் கொடுத்து வாயடி