பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

அழகியர் அனைவரினும் அற்புத அழகி என்று வியந்து போற்றப்பட வேண்டிய சுந்தரி ஒருத்தி எதிரே வருகிறாள்.

அவளுக்குத் தனது வீரபராக்கிரமத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆண்மை நினைப்பு அவனைத் தூண்டுகிறது. அவன் அங்கும் இங்கும் பார்க்கிறான். பெரிய பஸ் ஒன்று உறுமிக் கொண்டு போகிறது. அவனுக்கு வெகு சமீபமாக. ரஸ்தாவில் தான்.

ஏதோ எண்ணத்தில் திரிகிற அவன் ஒழுங்காக, ஒரமாய், நடைபாதையில் போகமுடியுமா? நடு ரோட்டில் ஜாம்ஜாமென்று அடிபெயர்த்துச் செல்லாமல் இருக்கிறானே, அது பெரிய விஷயம் இல்லையா? அது அந்த பஸ்ஸுக்கு எங்கே தெரிகிறது! கேவலம், பஸ் மிஸ்டர் கைலாசத்தின் அருகாக ஒடுகிறது.

முன்காலத்து ஆணழகன் அருகே, காளை அல்லது மதம் கொண்ட யானை, அல்லது சிங்கம் என்று எதுவோ ஒன்று வரும். அவனும், கடைக் கண் எறியும் காதல் பெண் கொஞ்சம் மகிழ்ந்து போகட்டுமே என்று, அதைச் சிறிது விசாரித்து அனுப்புவான்.

இப்போது உள்ளதைக் கொண்டு தானே ஊராள வேண்டும் கைலாசம்? அவன் தயங்குவானா என்ன? சிறு பொருளை எடுக்க நீட்டுவது போல் கையை அலட்சியமாக அனுப்புகிறான். வசதியான ஒரு இடத்தில் லபக்கென ஒரு பிடி. கம்பீரமாக நின்று அவன் பஸ்ஸை பற்றிக் கொள்கிறான்.

பஸ் முன்னே போக முடியாமல் திணறுகிறது. உறுமுகிறது. கனைக்கிறது. கர்ஜிக்கிறது... ஊகும். அசைய முடியவில்லை.

அது எப்படி முடியும்? அபிநவ பீமன் கைலாசம் விளையாட்டாகப் பிடித்து நிறுத்துகிறபோது?

வீதி வழிப் போவோருக்கு நல்ல வேடிக்கை. சக்கரங்கள் சுழல்கின்றன9. ரோடு பள்ளமாகிறது. ட்ரைவர் என்னென்னவோ பண்ணுகிறார். பஸ் நகரவில்லை.

ஹஹ் ஹஹ்ஹா! - கைலாசத்தின் பெரும் சிரிப்பு. வெள்ளி நாணயங்களைக் குலுக்கி விசிறி அடிப்பது போல.

எல்லோரும் அவனை அதிசயமாய்ப் பார்க்கிறார்கள். அவனுக்குப் பெருமை,

அந்தப் பெண் - அழகியர் திலகம்? கைலாசத்தின் கண்கள் தேடுகின்றன.

அவளுடைய அஞ்சன விழிகள் அவனையே மொய்த்து நிற்கின்றன. அந்தப் பார்வைதான் அவனுக்குச் சரியான பரிசு.