பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திட்டம் தவறிப் போச்சு 235

நாட்களில் நண்பர்களோடு சுற்றுலா போய் வந்தான். சினிமா பார்த்தான். சந்தோஷமாக இருந்தான்.

காலம் ஓடியது. பரிபூரண ஆனந்தர் பெரியவனாகி, வேலையிலிருந்து ஒய்வு பெற்று, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். தனி உணவு விடுதி நடத்திய அம்மாள் இறந்துவிட்ட பிறகு, ஆனந்தர் தனிப்பட்ட 'மெஸ்'களில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய உணவுப் பழக்கம் வசதியாக அமைந்துவிட்டது.

காலையில் காப்பியும் பிஸ்கட் தினுசுகளும். காப்பியை அவரே தயாரித்துக் கொண்டார். மதிய உணவு ஒரு ஒட்டலில். கும்பல் சாடுவதற்கு முன்னரே போய் சாப்பிட்டு வந்து விடுவார். மாலையில் காப்பி மட்டும். இரவில் பால், ரொட்டி, பழங்கள், ஆகவே, ஆரோக்கியமாகவே இருந்தார் அவர்.

இருந்தாலும், மரணம் பற்றிய நினைப்பு ஆனந்தரின் உள்ளத்தில் நிலைத்து நின்றது. தனது மரணத்துக்கும் முன்னேற்பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.

தான் இறந்ததற்குப் பிறகு உனது உடல் முழுமையாக, அப்படியே அடக்கம் செய்யப் படவேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆகவே, தனது சடலத்தை எரியூட்டாது, சமாதியில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்தார்.

தனது வீட்டின் பின்புறத் தோட்டத்தில், நல்லமுறையில் சமாதிக் குழிதோண்டி, சிமிண்டுனால் பூசி வைத்தார். உயிரோடு இருக்கிற போதே தனக்கான சமாதிக் குழியையும், சுற்றுப்புற கட்டுமான வேலைகளையும் சீராகவும் அமைத்து, தானே கண்டு மகிழ முடிந்ததில் ஆனந்தருக்கு ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது. இதர செலவுகளுக்குத் தேவைப்படக் கூடிய பணத்தையும் ஒரு பேங்கில் போட்டு வைத்தார் அவர். இறுதிச் சடங்குகள் எப்படி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, விளக்கமாகவும் எழுதிவைத்ததார். முக்கியமானவர்களிடம் இவை பற்றிச் சொல்லி, தக்க ஏற்பாடும் செய்தார். தன்னுடைய வாழ்க்கையில் முழுமையான திருப்தியோடு நாட்களைக் கழிக்கலானார் ஆனந்தர்.

வாழ்க்கை விளையாட்டுப் புத்தி உடையது. அல்லது, வாழ்க்கையை இயக்குகிற சக்தி விளையாட்டுத்தனம் கொண்டது என்று சொல்லலாம். அது பலபேரோடு குரூரமாக - ஒரு வக்கிரத் தன்மையோடு - விளையாடி விடுகிறது. பரிபூரண ஆனந்தர் விஷயத்திலும் அப்படித்தான் அது நடந்து கொண்டது.