பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் அதிர்ச்சி 251

இப்போது இந்திரா, கவர்ச்சி மிகுந்த நைலான் ஸாரி கட்டியிருந்தாள். அவனைக் கண்டதும் இயல்பாகவே அவள் முகம் மலர்ச்சி காட்டியது. உதடுகள் முறுவலில் நெளிந்தன. கண்களில் ஒளி சுடரிட்டது.

அவளோடு பேச வேண்டும் என்ற நினைப்பு அவனுள் ஆன்சையாய் கனல, அவன் 'என்ன, செளக்கியமா? என்று கேட்டு வைத்தான்.

அவள் 'ஊம்' என இழைய விட்ட குரலில் தேன் சொட்டியது.

அதற்கு மேல் பேச முடியவில்லை. அவள் பின்னால் வந்த பெரிய அம்மாள் அவளை முன்னே தள்ள, அவளைச் சுற்றிலும் மற்றவர் நெருக்க, நின்று பேசுவதற்கு, பெரிய ஒட்டலின் சிறிய வாசல் சரியான இடம் ஆகுமா என்ன?

அன்று முதல் அவளது இழையும் குரலும் சுடரொளிப் பார்வையும் அவன் உள்ளத்தில் நீங்காத நினைவுகள் ஆகிவிட்டன. இந்திரா யார்? அவள் வீடு எங்கே? அவளைப் பார்த்தால் உல்லாசமாக வாழ்கிறவள் மாதிரியும் தெரிகிறது. தவிர்க்க முடியாத ஏதோ கவலையால் - வேதனையால் - வாடுகிறவள் போலவும் தோன்றுகிறது... இந்தவிதமாக வீண் எண்ணங்களை அவன் மனம் வளர்த்து வந்தது.

இந்திரா என்கிற பெண்ணின் மீது - அவனுக்குச் சிறிதே அறிமுகம் ஆகியிருந்த, நன்கு பழக்கம் ஆகியிராத எவளோ ஒருத்தி மீது - சந்திரனுக்குக் கோபமும் கசப்பும் உண்டாவதற்கு ஒரு சந்தர்ப்பம் உதவியது.

அப்பொழுது சாயங்காலம் நாலரை மணி இருக்கலாம். சந்திரன் சிலரை ஒரு இடத்தில் கொண்டு சேர்த்து விட்டு, வெறும் வண்டியை ஓட்டிச் சென்றான். ஒரு வீட்டிலிருந்து சிலர் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும். அவர்கள் கலகலவெனச் சிரித்துப் பேசியவாறு தெருவில் இறங்கும்போதுதான் அவன் பார்வை அவர்களைக் கவ்வியது. அவர்களில் ஒருத்தி இந்திரா. அவளது சிரிப்பும் முகமலர்ச்சியும்!

சந்திரன் இதயத்தில் ஏதோ சுருக்கெனத் தைத்தது. ஆழமாகச் சதைக்குள் கூரிய முள் ஏறிவிட்டது போல. 'இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. நாகரிகத்தின் பேரால் என்னென்னவோ நடக்குது. பெரிய ஸிட்டியில் கேட்கவே வேண்டியதில்லை' என்று அவன் மனம் பேசியது. இவளும் இப்படிப் பட்டவள்தானா? சாதுக் குழந்தை மாதிரி தோன்றினாளே!...