பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் அதிர்ச்சி 253

'என்ன செளக்கியமெல்லாம் எப்படி?’ என்று அவன் கேட்டான்.

அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள். 'செளக்கியத்துக்கு என்ன?’ என்று இழுத்தாள்.

'இந்த வெயிலில் இப்படி எங்கே?' என்றான் அவன்.

கார் கிளம்பியது.

'நாங்கள் ஒரு நாடகம் போடப் போறோம். நானும் இன்னும் சில பேரும். அதுக்கு டிக்கட் விற்றுவிட்டு வரலாம்னு புறப்பட்டேன்'. அவள் நாடகம் பற்றியும், ஒத்திகைகள் பற்றியும் பேசினாள். 'அன்றைக்கு - முந்தா நாளோ - நீங்கள் காரில் போய்க்கொண்டிருந்தபோது கவனித்திருப்பீர்களே? ஒரு வீட்டு முன்னே நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தோமே. அங்கே தான் தினம் நாடக ஒத்திகை நடக்கிறது...'

'ஒகோ!' என்றது அவன் மனம். மேக மறைப்பு விலகி மீண்டும் ஒளி பிரகாசிப்பது போலிருந்தது. சந்தேகம் மறைந்து ஒடியது.

ஒட்டல் ஒன்று நெருங்குவது பார்வையில் பட்டது.

அவன் தயங்கி, சிந்தித்து, துணிச்சல் பெற்று, இந்திரா!' என்று அழைத்தான்.

'ஒ!' என்றவள், "என் பேர் கூடத் தெரிந்து விட்டதா உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"நீயும் உன் சிநேகிதியும் சினிமாவுக்கு இந்த வண்டியில் போனிர்களே, அன்று பேச்சோடு பேச்சாக...'

'சரிதான்!' என்று சொன்னாள் அவள்.

'இந்திரா, காபி சாப்பிடலாமே?' என்று அவன் கூறவும், அவள் தலையை ஆட்டிக்கொண்டே இப்ப எதுக்குக் காப்பி? என மறுத்தாள்.

'காபி வேண்டாமென்றால், கூல் ட்ரிங் ஏதாவது சாப்பிடு. நீ மிகவும் அலுத்துப் போயிருக்கிறாய்...'

அவள் பிகு செய்யவில்லை. அவன் அதிகம் வற்புறுத்தி உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. அவளுக்கும் ஏதேனும் பருக வேண்டியது அவசியம் என்றே பட்டது.

இருவரும் ஒட்டலுக்குள் போய் காப்பி சாப்பிட்டு விட்டு வந்து காரில் ஏறிக்கொண்டதும், தங்களுக்குள் நட்பு நெருங்கி வந்துள்ளது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவள் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்திருந்தது.