பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறறங்கரை மோகினி 267

ராஜத்தின் அப்பா அவள் கையைப் பற்றி, ஆதரவாக அவளைத் தூக்கி நிறுத்தினார். "ஒண்னுமில்லேம்மா. நாம் கோயிலுக்குப் போவோம். அங்கே உன்னைக் காணாமல் எல்லாரும் தவித்துக்கொண்டிருக்கிறாங்க” என்று சொல்லி, அவனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இப்போது, சாதுவான நல்ல பெண்ணாய் தலைகுனிந்துது மெதுநடை நடந்து சென்றாள் ராஜம். அந்திவேளைப் பொன்னொளியில் அவள் மின்னும் தங்கச்சிலை போல் தோன்றினாள்.

"அப்பனே, உன் கண்களே உன்னை ஏமாற்றிவிடும். வெளித்தோற்றத்தைக் கண்டு மயக்க முறச் செய்யும்" என்று பெரிய வேதாந்திபோல் சிந்தித்து, தலையை ஆட்டிக் கொண்டு தன் வழியே போனான் மகாதேவன்.

('சுதேசமித்திரன், 17-4-66)



அதிர்ச்சி


ரவின் அமைதியைக் கொன்றது அந்தக் கூக்குரல். யாரோ கொலை செய்யப்படுவதால் எழுகிற அலறல் போல ஒலித்தது அது. மனிதக்குரல் போல் அல்லாது பயங்காரமாக வீரிடும் ஏதோ ஒரு மிருகத்தின் கதறல் போல அது தொனித்து. அச்சம் கொண்டு அடித் தொண்டையிலிருந்து கதறியதான அந்த ஒலம் கேட்போருக்கு அச்சம் தந்தது.

அந்தத் தனிவீட்டின் மாடியில் இருட்டினூடே, எழுந்த அந்த நீண்ட கூச்சல், கீழே வீட்டினுள் படுத்துத் துரங்கியவர்களை உலுப்பியது. என்னவோ ஏதோ எனப்பயப்பட வைத்தது.

விழித்தவர்களில் ஒருவர் தட்டுத்தடுமாறி மின் விளக்கின் ஸ்விச்சைக் கண்டுபிடித்து அழுத்தவும், பளிச்சென ஒளி பரவியது. வீட்டில் வெளிச்சம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறிது தைரியம் கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, என்னது? ஏது? என்ன சத்தம்? யாரு இப்படி பயங்கரமாய்க் கத்தியது? என்று கேள்விகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

'மாடியிலே தான் கேட்டுது. மாமா தானே அங்கே படுத்திருக்காங்க?' என்று ஒரு பெண்குரல் குறிப்பிட்டது.

'ஆமா மாமாவுக்கு என்ன நேர்ந்திருக்கும்?’ என்று சந்தேகப்பட்டார் ஒருவர்.