பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரிழப்பு 293

போதெல்லாம், 'நம்ம ஊருக்கும் இவை எல்லாம் வந்திருக்கும். நம் ஊர் இப்போது பிரமாதமாக இருக்கும்’ என்று எண்ணாதிருக்க இயலவில்லை அவரால்.

அவர் வருஷம் தோறும் எவ்வளவோ செலவுகள் செய்தார். குடும்பம் என்றால் செலவுகளும் வளர்ந்து பெருகி எல்லை காண முடியாமல் தானே இருக்கும்? அதிலும் அவர் மனைவி ஒயாத சீக்காளியாக வேறு வந்து வாய்த்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் செலவு இனங்களைப் பெருக்கக்கூடிய சாதனங்களாகவே அமைந்தன. இதனால் எல்லாம் பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை தீராத தவிப்பாகவே வளர்ந்து வந்தது.

தூர தொலைவில் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள பலர் திருப்பதிக்குப் போக வேண்டும், காசிக்கு யாத்திரை போக வேணும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு 'நேர்த்திக் கடனை' தீர்ப்பதற்குப் போகமுடியாமல் வருஷா வருஷம் எண்ணியும் பேசியும் காலத்தை ஏலத்தில் விட்டு ஏங்கியிருப்பது போல, பூவுலிங்கமும் 'சொந்த ஊருக்குப் போய் சும்மா ஒரு தரம் பார்த்துவிட்டு வரலாம்’ என்கிற ஏக்கத்தை வளர்த்துப் பொழுது போக்கி வந்தார்.

இப்படியே விட்டுவைத்தால், முப்பது வருஷங்கள் ஓடி மறைந்த போலவே, பாக்கியுள்ள காலமும் பறந்துவிடும்; தனது அந்தரங்க ஆசையை நிறை வேற்றிக்கொள்ளாமலே செத்துப் போக நேரிடலாம் என்ற அச்சமும் அவருக்கு உண்டாயிற்று. சிறுகுளம் என்ற ஊர் மனமோகன சொர்க்கபுரியாய் மங்கி நின்று அவரை 'வா வா' என ஆசை காட்டி அழைத்தது. அதுவே பித்தாய், பேயாய் பிடித்து ஆட்டியது.

இனியும் தள்ளிப்போட்டு வந்தால் மன நிம்மதி குலைந்து, பைத்தியமே பிடித்துவிடும் என்று அவருக்குப்பட்டது. அந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, 'சட்டியைத் தூக்கிக் குட்டியில் போட்டு, குட்டியைத் துக்கி சட்டியில் போட்டு', ஏதேதோ வித்தைகள் செய்து, பொருளாதாரத்தை சரிப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் பிரயாணத்தை மேற்கொண்டார்.

பிரயாணம் முழுவதிலும் அவருக்கு இருந்த பரபரப்பும் உணர்வுக் கிளர்ச்சியும் அளவிட முடியாதவை. நாகரிக நகரத்தின் மகத்தான காட்சிகளும், நகரவாசிகளின் கவலையில்லாத தோற்றமும் பகட்டும் அவருக்கு அவருடைய சிற்றுரையும் அங்குள்ள மக்களையும் கிட்டத்தட்ட அதே ரகங்களும் தரங்களும் கொண்ட நிலைகளில் சித்திரம் தீட்டத் தூண்டுகோல்களாய் விளங்கின.

ஓடும் ரயில் அறிமுகம் செய்து காட்டிய நிலையங்களும், பாதை ஒர ஊர்களின் பெருமையும், புதிய கட்டிடங்களின்,