பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வளர்ப்பு மகள்

நினைக்கப்படாது... உங்ககூட மெட்ராசுக்கு வந்தவங்கெல்லாம் இன்னைக்கு வீடு வாங்கிட்டான். ஆனா நீங்க இன்னும் கந்தல் கோணிய கட்டிக்கினே கீறது நாயமா... குதிரையைக் குறையுங்கோ."

"குறைக்கிறதாவது. அடியோட விட்டுட்டேன். அப்படியும் கட்டல. பேசாம நம்ம செட்டியார் மாதுரி... துணி வாங்கி ஏலத்துல போட்டு விக்கலாமான்னு பார்க்கேன்"

அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக பேச்சு நடந்தது. தேர்தல், அரசியல்வாதிகள். சினிமா, எதையும் விடவில்லை.

'வீட்டுக்காரம்மா' மாடியில் இருந்து பார்த்தாள். வசதியே இல்லாத இந்த அசதிக்காரர்களால் எப்படி சிரிக்க முடிகிறது? எப்படி ஒற்றுமையாக இருக்க முடிகிறது? அவள் வயிறு எரிந்தது. அப்போது, சில சின்னப் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இட்லி ஆயா, தன் நொள்ளைக் கண்ணுக்கு மருந்து போடப்போனாள். மல்லிகா, தோழிகளுக்கு ஒரு கைக்குட்டையை வைத்து, அதில் எப்படிப் பூ போடுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று விளக்குகள் அணைந்தன. வீட்டுக்காரி, மாடியில் இருக்கும் 'மெயின் ஸ்விட்சை' 'ஆப்' செய்தாள். அனைவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள். ஏதோ பேசப்போன ராக்கம்மாகூட, வம்பு வேண்டாம் என்பதுபோல். பேசாமல் இருந்தாள். வயிற்றில் எரிந்ததை விளக்கை அணைத்து, வீட்டுக்காரி ஆற்றிக்கொண்டாள். அப்படியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால், அவள் வயிறு. மீண்டும் எண்ணெய் இல்லாத திரிபோல் எரிந்தது. அவள் உள்ளே போனாள். தகர டப்பா மச்சான் வெளியே வந்தார்.

"தூங்குங்களேய்யா. இப்படிப் பேசினால் எப்படி? நானு தூங்க வாணாமா. நாங்கல்லாம் மனசு வெச்சா ஒங்களால வாய முடியுமா... இன்னாயா பேச்சு..."

எதிர்ப்புக் குரல் கொடுக்காமலே, எல்லோரும் தூங்காமலே படுத்தார்கள். இருக்கிற பிரச்சினைகள் ஏராளம். இவன் பிரச்சினை வேறா? வேண்டாம். வீட்டைக் காலி பண்ணச் சொல்லுவான். அப்புறம். வீடு தேடி தெருத்தெருவாச் சுத்தனும் அவன் வீட்ல ரேடியோ பாடும்போதே நம்மை பேசக்கூடாதுன்னு சொல்றான் டப்பாப் பயல்.

அனைவரும் தூங்கி விட்டார்கள். அப்படியே தூங்கிப் யோனார்கள் ஆனால், 'வீட்டுக்காரியால் தூங்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/106&oldid=1134158" இலிருந்து மீள்விக்கப்பட்டது