பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

95

ஒரே தூக்காகத் தூக்கி, உள்ளே கொண்டுவந்து வீட்டுக்கார அம்மாவின் முன்னால் போட்டான். போடப்பட்டவனை மீண்டும் தூக்கி நிறுத்தி. கன்னத்திலும், காதுகளிலும், கும்மாங்குத்துக்களை விட்டுவிட்டு, பிறகு "ஒயுங்கா இரு... இல்லன்னா... உயிர எடுத்துடுவேன்..." என்று சொல்லி விட்டு. ஒரு தூணில் போய் சாய்ந்து கொண்டான்.

தம்பி, அடிபடுவது வரைக்கும் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, பிறகு அவன் விடுபட்ட பிறகு, வீட்டுக்காரி கத்தினாள்.

"எப்படியோ ஜோடிச்சி இல்லாததையும் பொல்லாததையும் பேசி, என் தம்பிய அடிச்சிட்டிங்க அவன் கையை இவள் பிடித்தாளா... இவள் கையை அவன் பிடித்தானான்னு தெரியாமலே அடிச்சிட்டிங்க இல்ல? ஒரடிக்கு ஒன்பது அடி கொடுக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்ல..."

கந்தசாமிக்குப் போன கோபம் மீண்டும் வந்தது. பேசாம போ... மே... பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். அந்த கம்மனாட்டிய அடக்கத் தெரியல.. பேசுறாள் பேச்சு."

"ஏய்... என்னையாடா. மேன்னு சொல்ற. நான் எருமை மாடாடா இந்த மல்லிகா... அவனைக் கண்ணடிக்கிறது... உனக்குத் தெரியுமா..."

"இந்த பாரும்மா! யாரை வேணுமுன்னாலும் பேசு. மல்லிகாவைப் பேசுன... வாய்... வெத்திலை பாக்கு பூட்டுக்கும். பொம்மனாடடியாச்சேன்னு பாக்கேன், நீ டா போட்டதக்கூட பொறுத்துக்கினேன்... மல்லியப் பேசுனே... நாறிப் போயிடுவே..."

வீட்டுக்காரி, கீழே கிடந்த தம்பியைத் தூக்கிக் கொண்டே, மாடிக்குப்போய், அங்கிருந்து பேசினாள், 'அம்மா' 'அம்மா' என்று சொல்லும் ஒருவன், 'மே' என்று சொல்லிவிட்ட திகைப்பிலேயே, சிறிதுநேரம் தடுமாறிவிட்டு, தாறுமாறாகப் பேசினாள்.

"என் தம்பிய கைவச்சுட்டல்ல? பாரு வேடிக்கையை... டேய்... ரமணா... இன்ஸ்பெக்டர் அண்ணனுக்கு போன் பண்ணுடா... வக்கீல் அண்ணாவுக்கு டெலிபோன் செய்டா. பெரியப்பா மகனுக்கு தெரியப்படுத்துடா... ரெண்டுல ஒண்ணப் பார்த்துப்புடலாம். பழிக்குப்பழி வாங்காம விடப்போறதுல்ல..."

ரமணன் வெளியே ஓடினான்.

பத்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ வந்து அலறியது.

இருவரும். ஆட்டோவில் ஏறினார்கள். கந்தசாமி அலட்சியமாக இருந்தான். அவன் மனைவி அழப்போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/109&oldid=1134172" இலிருந்து மீள்விக்கப்பட்டது