பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

99

இதுபோல், வீட்டுக்காரிக்கும். ஊசிப்போன இட்லிபோல் தோன்றும், 'இட்லி' ஆயாவான தங்கம்மா மீதுதான் அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது. சமயத்தை எதிர்பார்த்திருந்தாள்.

அந்த வீட்டின் வெளித்திண்ணையில், ஆயா கடை போட்டிருந்தாள். கரிப்புகையாலேயே கறுத்துப்போன ஒரு ஸ்டவ் அடுப்பில் நெருப்பு மூட்டி, வாணலியில் உளுத்தம் பருப்பு மாவை, பிடித்துப் பிடித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவை, 'கடுக்கன்கள்' கழட்டப்பட்ட காதுகள் மாதிரி, மெது' வடைகளாக மலர்ந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே சுடப்பட்டி இட்லிகள், ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் வளைவில் கட்டப்பட்டிருந்த கோணி, பாதி தூரம் தொங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து கண்ணாடிப் பாத்திரங்களில் பல்பம், நிலக்கடலை மிட்டாய் போன்ற வகையறாக்கள் நிரம்பி இருந்தன. சில பெண்கள், இட்லிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருசில சிறுவர்கள், வேர்க்கடலை மிட்டாய்களையும், கையில் இருந்த காசுகளையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் எட்டு மணிக்கு எழும் வீட்டுக்காரி, அன்று சீக்கிரமாக துயில் கலைந்திருக்க வேண்டும். திண்ணைக்கு அருகே வந்து, அதனுடன் ஒட்டிப் போட்டிருந்த கம்புத் துணைப் பிடித்துக்கொண்டே முதலில் செருமினாள். ஆயா, திரும்பிப் பார்த்ததும் கர்ஜித்தாள்.

"ஆயா... ஒன்கிட்ட எத்தன தடவ சொல்றது... போன வாரமே... இனிமேல் திண்ணையில்... கடை போடப் படாதுன்னு சொன்னேமுல்ல? ஒன் செவிட்டுக் காதுல விழலியா... நான் சொல்லியும்... திண்ணையை பிடிச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தமின்னேன்... ஒன்னால திண்ணையைக் காலி பண்ண முடியுமா... முடியாதா.. எனக்கு இப்போவே தெரியணும்...."

ஆயா, அவளையே சிறிதுநேரம் வெறித்துப் பார்த்தாள். மலர்ந்த வடைகள், வாணலியில் கருகிக் கொண்டிருந்தன.

"ஒன்னத்தான்... சொல்றது காதுல விழல? ஒனக்குல்லாம் சொல்றதோட நிறுத்திக்கிறது தப்பு..."

ஆயா மன்றாடினாள்.

"குயந்தே... நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே போட்ட கடை குயந்தே... ஒனக்குக்கூட அப்போ ஒசில வடை தந்திருக்கேன் குயந்தே. ஒன் நயினா... இந்த வீட்டை வாங்கு முன்னால... இருந்த புண்ணியவான்தான்... நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு. தங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/113&oldid=1134185" இலிருந்து மீள்விக்கப்பட்டது