பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வளர்ப்பு மகள்

இப்படி என்ன செய்வதென்று அவர் தவித்துக் கொண்டிருந்தபோது, மல்லிகாவிடம் இருந்து சொத்துக்கு உரிமைகோரி நோட்டீஸ் வந்தது. அது அவருக்கு, தனது ஈமச்சடங்கிற்கான பத்திரிகைபோல் தெரிந்தது. அதில் கறுப்பு பார்டர் போட்டிருக்கும்! இதை, கறுப்புக் கவுன் போட்ட வக்கீல் அனுப்பியிருக்கார்.

"என் மகளா... இப்படிச் செய்துட்டாள்? என் மகள் என்றால் இப்படிச் செய்வாளா. செல்லக்கிளியே. இதுக்கா உன்னை வளர்த்தேன்... இதுக்கா உன்னை எடுத்தேன்? இதுக்கா... இதுக்காம்மா?"

சொக்கலிங்கத்திற்கு அழுகையே வந்துவிட்டது.

ஓரிரு நாட்கள் ஓடின.

சட்டாம்பட்டியில் இருந்து, கல்யாணம் கிடையாது என்று வந்த கடிதத்தை பார்வதி பிரித்துப் படிக்குமுன்னாலேயே, அந்தக் கடிதம், எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியும் முன்னாலேயே, சொக்கலிங்கம் மார்பைப் பிடித்துக் கொண்டே கத்தினார்.

"எய்யா... எம்மா... நெஞ்சை வலிக்கே... நெஞ்சு..."

சொக்கலிங்கம், மார்பைப் பிடித்துக்கொண்டே படுக்கையில் விழுந்தார். "என்னாங்க... என்னாங்க" என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்த பார்வதியின் வார்த்தைகள் தன் காதில் விழும் முன்பே, அவர் படுக்கையில் விழுந்தார்.


23

அப்பாவுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியது சரிதானா என்று யோசித்து யோசித்து, மல்லிகாவிற்குத் தலை குழம்பியது.

அப்போது, மல்லிகாவின் தம்பி பரமசிவத்திடம். சரவணன் ஒரு காகிதத்தை நீட்டி, விசாரித்துக் கொண்டிருந்தான்.

மல்லிகாவிற்கு நாடி நரம்பெங்கும் ஏதோ ஒன்று வியாபித்தது. சொல்லமுடியாத சொன்னாலும் விளங்காத அச்சத்தையும், அதேசமயம் அஞ்சாமையையும். துன்பத்தையும். அதேசமயம் இன்பத்தையும் ஏக்கத்தையும், அதேசமயம் எதிர்பார்ப்பையும். பலமுனைப் பார்வையும், அதேசமயம் ஒருமுனைப்பட்ட உள்ள உணர்வையும் கொடுக்கும். ஏதோ ஒரு சுகம்... ஏதோ ஒரு..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/126&oldid=1134236" இலிருந்து மீள்விக்கப்பட்டது