பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

113

சரவணனிடம். உள்ளத்தை முன்னால்விட்டு. உவகைமுட்ட அவள் பின்னால் நடந்தாள். மெல்ல மெல்ல நடந்தாள். இருபதடி தூரத்தில் குடித்தனத் தோழிகளைப் பத்துத் தடவை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே போனாள். பிறகு, "வக்கீல் அப்பா அனுப்பி இருப்பாங்க.. இல்லன்னால் வரவா போறீங்க.." என்று அவனுக்குக் கேட்கும்படியாகப் பேசுவதாய் நினைத்து, தனக்கே கேட்காமல் பேசினாள்.

சரவணன், அவளையே பார்த்தான். உல்லி உல்லிப் புடவைக்குப் பதிலாக, சின்னாளப்பட்டி காதில் 'ரிங்' இல்லை. கழுத்தில் செயின் இல்லை. கையில் வளையல்கள் இல்லை. ஆனால் இவற்றைவிட மேலான ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதுபோல் தோன்றியது. காதலா... கனிவா... சேவை கொடுக்கும் திருப்தியா...

தட்டுத்தடுமாறி சரவணன் ஏதோ பேசப் போனபோது, குடித்தனப் பெண்கள் 'ஏதோ இருக்கு' என்பதுபோல் பார்த்தபோது, மல்லிகாவின் அம்மாள் செல்லம்மா, "அய்யோ.. கடவுளே... எங்க அண்ணனுக்கா... என் உடன் பிறப்புக்கா" என்று தலையில் அடித்துக்கொண்டே வந்தாள். மல்லிகா துடித்துப்போய், அம்மாவின் கரங்களைப் பற்றியபோது, அவள், "உங்க அப்பாவ... தண்டையார்பேட்டையில். மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நர்சிங்ஹோமில் சேர்த்திருக்காம். பிழைக்கிறது கஷ்டமாம். அய்யோ... அண்ணா” என்று அரற்றினாள். பிறகு "மல்லிகா... மல்லிகா..."ன்னு சொல்லுக்குச் சொல்லு புலம்புறாராம்" என்று சொல்லிச்சொல்லிப் புலம்பினாள்.

மல்லிகா விக்கித்து நின்றாள். கல்லாகி, மீண்டும் பெண்ணான அகலிகை, உடனே கல்லானதுபோல, குளிர்ச்சியை விரும்புபவளை, கொட்டும் உறைபனிக் காலத்தில் பனிக்கட்டிக்குள் போட்டதுபோல். மலர்க்காடு பிணக்காடாய் ஆனது போல். துவண்டு நின்றாள். "மல்லிகா மல்லிகான்னு புலம்புகிறாராம்" என்று அம்மா சொன்ன வார்த்தைகள், மலைப்பாம்பாய் மாறி. அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. புலியாய் மாறி. அவள்மீது பாய்ந்து கொண்டிருந்தது.

மல்லிகா. சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள், கேட்டாள்.

"சைக்கிளில்தானே வந்தீங்க..."

"இல்ல, ஸ்கூட்டரில்..."

"என்னை ஸ்கூட்டரில் கொண்டுவிட முடியுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/127&oldid=1134238" இலிருந்து மீள்விக்கப்பட்டது