பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திர மயம்


அந்தக் கூண்டில், சந்திரா, கழுத்தில் தலையை மடித்துப் போட்டபடி நின்றாள்.

ஆரம்பத்தில், தனது அருகே நின்றவனையோ, அல்லது அப்படி நிறுத்தப்பட்டவனையோ வழக்கம்போல் யந்திர மயமாகத்தான் பார்த்தாள். பார்க்கக்கூடவில்லை. அவளுடைய நேர்பார்வையில் கண்ணின் விளிம்பில் அவன் தற்செயலாகத்தான் பட்டான். வாய்தா வாய்தாவாக வளர்ந்துபோன அவன் தாடியைப் பற்றி இவளுக்கு எந்த சிந்தனையும் இல்லைதான். அந்த தாடி மறைத்த குழந்தைத்தனமும் முதிர்ச்சியும் பின்னிப்பிணைந்த அவன் முகம், இவள் மனதில் பதியவில்லை. ஒன்றில் இருந்து இன்னொன்றிற்கு கொண்டுசெல்லும் மூளையின் ஒரு பகுதி மரத்துப்போனதோ என்னமோ..

அந்த நீதிமன்றத்தின் இருபக்கச் சுவர்களிலும் ஒட்டிப்போடப்பட்ட முதுகில்லாத பெஞ்சுகளில் நிரம்பி வழிந்த வாதிகளும், பிரதிவாதிகளும் கருப்புகோட்டுக்காரர்களும் நீதிபரிபாலன மேடையில் நிற்பதுபோல் உட்கார்ந்தபடி, துவார பாலக, பாலகியாய் தோன்றிய பெஞ்ச் கிளார்க்கும். ரிக்கார்ட் கிளார்க்கும். ஒட்டுமொத்தமாக அவளையும், அவனையும் உற்றுப் பார்த்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இப்படிப்பட்ட அழுத்தமான பார்வை. முன்பெல்லாம், கூண்டில் நிற்பவர்களை ஒரு தடவை பார்த்துவிட்டு மறுதடவை முகம் திருப்பும் அத்தனைபேரும் அவர்கள் இருவரையும் ஜோடிசேர்த்து, பார்த்து ரசித்தார்கள். இவளுக்கு வலது பக்கம் உள்ள டெஸ்க் பெஞ்சுகளில் பால்பாயின்ட் பேனாக்களும் குறிப்பேடுகளுமாய் உள்ள செய்தியாளர்கள். எழுதுகோல் மூடிகளை கழற்றிப் போட்டார்கள். அவர்கள் போட்ட வழக்குச்செய்திதான். இப்போது அவர்களுக்கே மறந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/135&oldid=1134337" இலிருந்து மீள்விக்கப்பட்டது