பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

127

மேலாக நேசித்தவன். அவ்வப்போது வீட்டிற்கு வருவான். அம்மாவை அடித்துப்போடுவான். மனைவியை உதைத்துப் போடுவான் ஆனால் இந்த சந்திரா என்றால் அவனது மறுப்பக்கமான பாசம் வெளிப்படும்.

இப்போது, இவள் இந்த கோபாலோடு வந்ததை, தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டான். குடும்ப மானத்தை விட்டுக் கொடுத்த தங்கைக்காரி, இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும், அப்படி வந்தால் சாராய அடுப்புக்குள் வைத்து எரிக்கபோவதாகவும் சூளுரைத்தான். அதே சமயம், அந்த உலகமகா முரடனாய் அரிவாள் பக்கிரி என்று அறியப்பட்ட மாரியப்பனுக்கு தான் ஆடாவிட்டாலும் ஒரே ஜீன்களைக் கொண்ட சதையாடியது.

இந்த கோபால் மட்டும், அப்பவே அந்தக் கணத்திலேயே, தனது தங்கையைத் திருமணம் செய்யவில்லை என்றால், இன்னொருத்திக்குத் தாலிகட்ட அவன் கையிருக்காது என்றான், மாரியப்பன். ஒரேயடியாக கொல்லாமல், ஒரு கையையோ, காலையோ எடுத்து, அவனை வாழ்நாள் முழுவதும் ஊனமாக்க போவதாகவும் மிரட்டினான். அண்ணன் சொன்னால் சொன்னதுதான் என்பதை அறிந்து வைத்திருந்த சந்திரா, தன் உயிருக்காக வாதாடாமல், காதலனுக்கு உயிர் பிச்சை கேட்டாள். அண்ணனின் யோசனைப்படி ஒரு கோவிலுக்குப் போனார்கள். அண்ணனே ஒரு ரெடிமேட் தங்கத் தாலியை வாங்கி வந்து, தங்கையின் கழுத்தில் கோபாலை, பிள்ளையார் கோவிலறிய, அதன் அர்ச்சகர் அறிய பக்தர்கள் அறிய, தாலிகட்ட வைத்தான். பின்னர் தம்பதியரை கூட்டிச் சென்று, மாப்பிள்ளை வீட்டில் விட்டான். ஏதாவது ஏடாகூடமாக நடந்தால், அந்த வீடே தரைமட்டமாகிவிடும் என்று மிரட்டி விட்டுப் போய்விட்டான்.

இந்த அரிவாள் பக்கிரியைப் பற்றி அறிந்திருந்த மாமனார் அருணாசலம், வாய்மூடிக்கொண்டார். அந்த தானைத் தலைவன் சென்றதும். மகனை ஒப்புக்குத் திட்டினார். பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் புதிய வரவால், மகன், தனக்கு கொடுக்கும் மாமூல் நின்றுபோய், குடிக்க காசில்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தில், "பிடித்தாலும் பிடித்தே புளியங் கொம்பாய்தான் பிடிச்சிருக்கே குடும்ப பாங்கான பெண்தாண்டா" என்றார். மாமியார் அன்னம்மாவும் நடந்ததை மாற்ற முடியாது என்பதால், நடந்ததற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டாள்.

ஆனால், ஏழாண்டு காலத் தோழியான கோபாலின் தங்கை அனிதாதான் இவளை ஏற்றுக்கொள்ள மறுத்தாள். அப்போது திருமணம் ஆகாத இவள், தனது முன்னாள் தோழியைப் பார்த்து காறித் துப்பினாள். சிந்தித்துப் பார்த்த சந்திராவுக்கு அவள் எதிர்ப்பு பெரியதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/141&oldid=1134343" இலிருந்து மீள்விக்கப்பட்டது