பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

இந்திர மயம்

காகிதத்தின் மேல் கண் போடுகிறாள். மற்றபடி எல்லாமே மயான அமைதி.

இருவரும். இந்த அறைக்கு அருகே, உள்ளே பார்க்க முடியாத பச்சைக் கண்ணாடி தள்ளுகதவை திறந்தபடியே போகிறார்கள். உள்வளைந்த மேஜைக்கு மத்தியில் போடப்பட்ட சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் டாக்டர். முத்துராஜ், தனது முன்னாள் மாணவியான காயத்ரியைப் பரிவோடு பார்க்கிறார்... அந்த மருத்துவமனையில் இவள் பாலியல் நோய் நிபுணர். தூக்கலான சிகப்பு முகம். அந்த முகம் பார்க்கும் பார்வையிலும், ஆறுதலான பேச்சிலும், பாதி நோய் போய்விடும். "யாம் இருக்க பயமேன்" என்று அபாயத்திலிருந்து அபயமளிக்கும் பார்வை. தோள் சுமக்கும் ஸ்டேத்தாஸ்கோப்... டாக்டர் காயத்ரி 'ஹலோ புரபஸர்' என்கிறாள், உடனே அவர் சிரிப்பும் கும்மாளமுமாய் பதிலளிக்கிறார்.

"இந்தா பாரு.. சும்மா சும்மா என்னை புரோபோஸர் என்று சொல்லாதே... இல்லாட்டி.. வருகிற நோயாளிங்க நான் டாக்டரே இல்லை உதவாக்கரை பேராசிரியருன்னு நினைத்து ஓடிப் போயிடுவாங்க. போகட்டும் என்ன விஷயம்?"

'உங்ககிட்ட எந்த விஷயத்திற்கு வரணுமோ அந்த விஷயத்திற்கு வந்திருக்கேன்... இவள் என் தோழி... இவளோட கணவன், தன்கிட்ட இருந்தது எல்லாத்தையும் இவள் கிட்ட தானமாக- பாசமாக் கொடுத்துட்டான்... இவள் அபார்ஷனுக்கு வந்திருக்கும் போது ரத்த பரிசோதனை செய்தேன். ஸ்பேக்குலம் போட்டு பார்த்தேன். சிபிலிஸ் நோய் வந்திருக்கு. உள்ளேயும் சதைகள் சிதைந்து துருத்திருக்கு."

"ஊசி போட்டு அனுப்ப வேண்டியது தானே. இங்கு ஏன் வந்தே..."

"நோயாளியே இல்லை... இதில வேற உங்களுக்கு அவசர பாவலாவா? இவளுக்கு சிபிலிஸ் நோயோட உண்மை சொரூபத்தை விளக்கியாகணும். ஸ்லைடு போட்டுக் காட்டுங்க."

"டாக்டர் காயத்திரி, உட்கார்ந்தாள். நின்று கொண்டிருந்த சந்திராவை "உட்காரும்மா நான் இருக்கேன் கவலைப்படாதே" என்று சொல்லி விட்டு. டாக்டர். முத்துராஜ், சுழல் நாற்காலியை நகர்த்திப் போட்டு. அந்தப் பெண்களுக்கு சாய்வாய் முகம் காட்டி, சட்டைப் பைக்குள் தயாராக வைத்திருந்த அடுக்கடுக்கான ஸ்லைடுகளை எடுத்தார். சதுரமான காகித வேலி இடுக்குகளுக்குள் கரும்பச்சை திரைச்சுருள் சொருகப்பட்டிருந்தது. அதில் ஒன்றை எடுத்து கருவண்டு மாதிரியான ஒரு யந்திரத்தின் வாயில் சொருகினார் உடனே எதிர்ப்புற தொலைக்காட்சி மாதிரியான திரையில் உடல் விளிம்புகளில் சதை முட்களோடு ஒரு கிருமி நிழலாடியது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/146&oldid=1134554" இலிருந்து மீள்விக்கப்பட்டது