பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வளர்ப்பு மகள்

"நீ எதுவும் போடாண்டாம். நான் இப்போ சொல்றதுதான். இனிமேல். என்கிட்ட நீ கேட்டாலும். நான் பேசப் போறதில்லை சத்தியமாய் உட்கார்ந்த இடத்துல இருந்து சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. மல்லிகா. நல்ல பெண்ணாவே இருக்கலாம். ஆனால் பெண்புத்தி பின்புத்தி... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... சும்மா பேச்சுக்கு. இப்போ நல்லா இருக்கிற மல்லிகா, அப்போவும் நல்லா இருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? நாளைக்கு, மல்லிகாவுக்குக் கல்யாணம் நடக்கப்போகுது. அவள் புருஷனோ இல்ல மாமன் மாமியாரோ, அவளை குரங்காய் ஆட்டிப் படைக்க மாட்டாங்க என்கிறது என்ன நிச்சயம்? இவள் பெருமாள்கிட்டே போகமாட்டாள் என்கிறது என்ன நிச்சயம்? தான் ஆடாட்டாலும், சதை ஆடாதோ? நான் உன்கிட்ட வைத்திருக்கிற பாசத்தை மாதிரி, இவளும், அப்பன்கிட்ட பாசத்தைக் காட்டமாட்டாள்னு எப்படிச் சொல்லமுடியும்? அப்படியே காட்டினாலும், அதுல என்ன தப்பு?"

"நீங்க எப்பவுமே இப்படித்தாண்ணா... எதையாவது சொல்லிக் கோளாறு செய்வீங்க.. ஆனால் வழி மட்டும் காட்ட மாட்டிங்க."

"இதுக்கு ஒரே வழி இருக்கு."

"சொல்லுங்க... அவரு வந்துடப் போறாரு."

"உன்னால மல்லிகாவை விட்டுட்டு இருக்கமுடியாது. அதேசமயம், மச்சானுக்குப் பிறகு உன் கையே ஓங்கி இருக்கணும். இதுக்கு ஒரே வழி, நம்ம ராமனுக்கு, மல்லிகாவை கட்டிப் போட்டால்தான் முடியும்."

"அது எப்படிண்ணா முடியும்? சின்ன வயசுலே உருப்படி இல்லாமல் போயிட்டான். நீங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் எட்டாவது வகுப்புக்கு மேல தாண்டல தாகம் எடுக்கும்போதெல்லாம் பட்டைச் சாராயத்தைப் போடுறான். இதுல வேற ரவுடித்தனம்."

"இந்தக் காலத்துல ரவுடித்தனம் செய்கிறவன்தான். இந்த மெட்ராஸ்ல பிழைக்க முடியும். பட்டச் சாராயம் இப்போ குடிக்கான். நாளடைவில் அதையே காய்ச்சி. கார் பங்களா வாங்க மாட்டான்னு எப்படிச் சொல்ல முடியும்? அதோடு உன்னோட சொந்த அக்காள் மகன். ரத்தத்துக்கு ரத்தம். உன்னோட கடைகண்ணிகளை கட்டிக் காப்பாத்த இப்படிப்பட்டவன்தான் லாயக்கு பெருமாள் இவன்கிட்ட வாலாட்ட முடியுமா? அவன் கேடிதான். ஆனால், நம்ம பயல் ரவுடி!"

"நூறாண்டுப் பயிருண்ணா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/42&oldid=1133690" இலிருந்து மீள்விக்கப்பட்டது