பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

29

"என்னவோ... இப்பவே கல்யாணத்துக்கு நிச்சயமானது மாதிரி பேசுறியே. என் மூத்த மகளை ராமனுக்குக் கொடுக்கலாமுன்னு நினைத்தேன். ராசிப் பொருத்தம் இல்ல. இரண்டாவது பெண்ணை கொடுக்கலாமுன்னு நினைக்கேன். ஒரு வாரம் டயம் கொடுக்கேன். யோசித்துச் சொல்லு, உன் அக்காள் மகன்மேல உனக்கில்லாத பாசமா? உனக்கில்லாத பொறுப்பா? ஒரே ஒரு வாரந்தான் டயம். நீ, மல்லிகாவை கொடுக்கலன்னா. நான் என் இரண்டாவது மகள் நளினியை கொடுக்கப் போறேன். அப்புறம் என்மேல வருத்தப்படப்படாது. நான் வரட்டுமா?"

பார்வதி, அண்ணனைப் 'போய் வாருங்க' என்று சொல்ல முடியாத அளவுக்கு, பித்துப் பிடித்தவளாய் இருந்தாள்.

ராமசாமி போய்விட்டார். ஆனால், அவர் கோள்மூட்டிய வார்த்தைகள் காதுகளிலிருந்து போகவில்லை. ஒலித்துக் கொண்டே இருந்தன. பார்வதி, தன் உள்ளத்தையே போர்க்களமாக்கிவிட்டாள்.

"மல்லி ஒருவேளை... அவருக்குப் பிறகு, அப்பாகூட சேர்ந்திடுவாளோ அந்த குடிகாரன் சொன்னபடி எல்லாம் ஆடுவாளோ? அப்படியானால் என்கதி. என்கதி? அனாதையாக ஆயிடுவேனோ? சொத்தெல்லாம் போயிடுமோ? மல்லி நல்லவளாய் இருந்து, அவள் புருஷன் மோசமாய் இருந்தால் என் கதி என்னாகிறது? அண்ணன் என்கிட்ட சூதாய் பேசமாட்டாரு. என் நன்மைக்காகத்தான் பேசுவாரு. அதோட இந்த ராமன், என்னோட சொந்த அக்காள் மகன். ஊரில் ரவுடித்தனம் செய்தாலும், என்னை 'சித்தி'ன்னு வாய்நிறையக் கூப்புடுற பிள்ளை, அவனும் நல்லா இருக்கணும், மல்லிகாவும் நல்லா இருக்கணும். குடிகாரன் பெருமாள்கிட்டே வரப்படாது. அதுக்காக, பொருத்தம் இல்லாத கல்யாணத்தைப் பண்ண முடியுமா? முடியணும். எப்படியோ முடியணும். இந்த மல்லிகா பெருமாள் பெண்தானே... அப்பன் புத்தியில் கால்வாசியாவது இருக்காதா?"

ராமசாமி போனதில் இருந்து மல்லிகா கல்லூரியில் இருந்து திரும்புவது வரைக்கும் பார்வதிக்கு ஒன்றும் ஓடவில்லை. வயிற்றுக்கு எப்போதும் வஞ்சகம் செய்யாத அவள், அன்று சரியாகச் சாப்பிடக்கூட இல்லை.

துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே வந்த மல்லிகா, "அம்மா, நான் கட்டுரைப் போட்டியில் இரண்டாவதாக வந்திருக்கேன் அம்மா" என்றாள்.

பார்வதி அப்போதைக்கு. அண்ணனையும். அவர் சொன்னதையும் மறந்துவிட்டுக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/43&oldid=1133692" இலிருந்து மீள்விக்கப்பட்டது