பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வளர்ப்பு மகள்

இதை பெரியண்ணன் மூலம் புரிய வைக்கப்பட்ட பார்வதி ஒருநாள், மல்லிகாவைப் பார்த்து. "ராமன்கிட்ட ஏம்மா சிடுசிடுன்னு பேசுற. கொஞ்சம் சிரித்துத்தான் பேசேன். நீன்னா அவனுக்கு உயிரு" என்று. பட்டும் படாமலும் பேசினாள்.

அம்மாவின் அபிலாஷை புரியாத மல்லிகா, 'இவருகிட்ட சிரித்துப் பேசுறவள், யாருகிட்டயும் சிரித்துப் பேசுறவளாத்தான் இருப்பாள். இதுவும் இது மூஞ்சும். அப்பா சொன்னதுமாதிரி சரியான ஓணான் மூஞ்சி" என்று எரிச்சலோடு சொன்னபோது, பார்வதிக்கு படுஎரிச்சலாக இருந்தது. அண்ணன் வந்ததும் வராததுமாக "நான் பூடகமாய்ப் பேசிப் பார்த்தேன். இவள், சம்மதிக்க மாட்டாள் போலிருக்கே" என்றபோது, ராமசாமி, ஒரு வில்லன் சிரிப்பை உதிர்த்துக்கொண்டார்.

"பாரு... பக்குவமாகச் சொல்லிப் பாரு. மாட்டேன்னுட்டாள்னா, கழுதையை வீட்டை விட்டுத் துரத்து..."

"அது எப்படியண்ணா..."

"சிலசமயம்... ஆபரேஷன் செய்யணுமுன்னா செய்துதான் ஆகணும். ராமனைக் கட்டிக்கச் சம்மதிக்கலன்னா, அவள் இங்க இருக்கறது அர்த்தமில்லை... இது உன்னோட சொந்த விஷயம். கேட்டாக் கேளு. விட்டால் விடு. ஆனால் ஒண்னு அப்புறமாய் பெருமாள் திட்டுறான்... மல்லிகா புருஷன் அடிக்க வரான்னு என்கிட்ட வரப்படாது. சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியணும். இல்ல... என் ரெண்டாவது மகள் இருக்கவே இருக்காள்..."

"ஏண்ணா கோபப் படுறீங்க? நான் பொம்பள. எனக்கு என்ன தெரியும்? உங்ககிட்ட யோசனைதானே கேட்டேன்."

"அதைத்தான் சொல்றேன். மல்லிகா, இந்த வீட்ல இருக்கிறதாய் இருந்தால், நம் ராமன் பயலோட இருக்கணும். இல்லன்னா எங்கேயும் போகட்டும். நீ, ராமனையே சுவீகாரமாய் எடுத்துக்கலாம். என் ரெண்டாவது பொண்ணு, உனக்கே மருமகளாய் வந்துடலாம். நீ கண் மூடுறது வரைக்கும், கண்கலங்காமல் பார்த்துக்குவாங்க..."

சிறிது திடுக்கிட்ட பார்வதிக்கு, மல்லிகாவை என்னதான் வெறுத்தாலும் அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுவது என்பதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. அதேசமயம், அண்ணன் சொன்னதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல், லேசாகச் சிரித்துக் கொண்டாள். சோகச் சிரிப்பு.

பார்வதியின் அண்ணன் போய்விட்டார் என்பதை. அரவை மில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/48&oldid=1133701" இலிருந்து மீள்விக்கப்பட்டது