பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

இதற்கு ஏற்ப, வலிய சக்தி நிறைந்த திடகாத்திரமான உடல் வேண்டும். உடல் திறன் வேண்டும். சில நேரங்களில் இடிபடவும் வேண்டும். சில நேரங்களில் அடித்து விடவும் கூடும். இடியைக் கண்டு குலைந்து போகாத உடற்கட்டும், மனக்கட்டும் நிறைய வேண்டும்.

முற்றுகையிடுவது போல, எதிரிகள் வந்து மொய்த்துக் கொள்வார்கள். திடீர் திடீரென்று வந்து, வந்து தாக்கி, இலக்கினுள் பந்தை அடிக்க முயலும் பொழுது, அந்த நேரத்தில் ஸ்தம்பித்து நிற்பதோ, குழப்பத்தில் ஆழ்ந்து குழறிப் போய் விடுவதோ கூடாது. அந்தச் சூழ்நிலையை சமாளிக்கின்ற, சாதுரியம் வேண்டும். இருக்கும் சிறிது நேர அவகாசத்திற்குள்ளேயே, சிறந்த முடிவினை எடுக்கக் கூடிய நுண்ணறிவும், முன்கூட்டியே பந்து எப்படி தன் இலக்கை நோக்கி வரும் என்று உணரும் முன்னறிவும் வேண்டும்.

கால்களால் பந்தை உதைத்தாடக்கூடிய உரிமை தனைப் பெற்ற ஒரே ஒரு ஆட்டக்காரர். இவராக இருப்பதால், வலிமையான கால்கள் வேண்டும். வலிமையான கால்கள் இருந்தால் தானே, வெகு துாரம் பந்து கடந்துப்போவது போல உதைக்க முடியும்!.

கண்ணுக்குத் தெரியாமல் சீறிப் பாயும் மின்னல் வேகத்தில், அடிபட்ட பந்து இலக்கு நோக்கிப் பறந்து வரும். அது தரையோடும் வரும். மார்புக்கு நேராகவும் பாயும். முகம் நோக்கியும் விரையும். சில சமயங்களில் உடலையும் தழுவும். அதுபோன்ற சூழ்நிலைகளில்,

பந்தின் மேலேயே தொடர்ந்து சென்றிடும் கூரியமதி, கருத்தான நோக்கம், கடமை நிறைந்த கண்ணோட்டம், மிகமிக முக்கியமானத் தேவைகளாகும்.