பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி - 157

கீழ்நிலைக்கு இதுவே காரணம். சில்லாண்டுப் பொதுவறிவுக்குப் பின், பல்லாண்டுத் துறையறிவு வழங்கல் வேண்டும். வழங்கும் தொழிற்கூடங்கள் பெருகல் வேண்டும். கற்பவை கல்லாததால் அன்றோ இற்றைக் கல்வி கேடுபடுகின்றது. ‘சாந்துணையும் கல் (397) என்றார் வள்ளுவர். ஆதலின் கல்வி நிலையங்கள், அனைத்தையும் கற்பிப்பான் புகுதல் கடைபோகாது; புகின் சாக்குப் பையுள் குத்தி நிரப்புதல் போல் கருத்துக்களை வலிந்து திணித்தலாகுமே யன்றி உளங்கொள உணர்த்தலாகாது. கல்வி கோலுவார் உயர்ந்த எண்ணத்தால் பயனில செய்யற்க. இவ்வெல் லாம் கற்க கற்பவை (391) என்னும் வள்ளுவ முரண்கள்.

இற்றைக் கல்வி வேண்டி நிற்பது செம்மை, செம்மை, செம்மை. மாணாக்கர் கற்கும் நூல்களுள் ஒரு பகுதி கற்பவை என்று ஒத்துக் கொள்ளினும், கற்கு முறை பெரும் பிழையாகக் காண்கின்றோம். சொல்லிக் கொடுப்பது யாங்ஙன் என ஒரு வகையில் ஆசான் ஆவார்க்குப் பயிற்சி கொடுக்கின்றோமே யல்லால், ஏற்றுக்கோடல் எங்ஙன் என மாணவர்க்கு யாதும் உணர்த்துகின்றோம் இல்லை. இஃது ஒருதலைக் காமம் என்னும் கைக்கிளை போல்வது. ஏக்கற்றும் கற்றார் (395) என்றபடி, கல்வியை வாரிக் கொள்வோம் என்னும் ஏக்கறவு மாணாக்கர்க்கு வளரவில்லை. உண்டது செரிப்பினன்றே பசியெடுக்கும். கற்றது தெளிந்தால் அன்றோ அறிவுப்பசி எழும். அடிப்படை வலுவின்மையின், யாது சொல்லி னும் அன்னோர் மெல்லிய நெஞ்சம் பதிவு செய்துகொள்ள மாட்டுவதில்லை. ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால் (1110) என்பது பயிற்சிப் பயன்: அறியுந்தோறும் அறிய வேண்டுவன இன்னும் பலவுள எனக் கற்பவர் அறிவுப் பேற்றுக்கு எல்லை யின்மை காண்பார் என்பது இக் குறள் நுதல் பொருள். இதற்கு நேர் மாறாவது இந்நாள் மானவர் நிலை. ஆசிரியன்பாற் கேட்ட பழம் பாடத்தையே படிக்கப் புகுந்தொறும் புதுப்பாடமாக மயங்குப. பள்ளி கல்லூரிகட்குச் சென்று நாள் தொறும் ஐந்துமணிப் பகற்போது அமர்ந்து ஆசான்வாய்ப் பாடங் கேட்டொழுகும் மாணவ மாணவியர் அவ்வளவில் கல்வி பெற்றார் அல்லர் என்றால், அது சாலும் நம் கல்வித் திட்டம் நீள்மாசு படிந்தது என்றற்கு.