பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வள்ளுவம்

ஏது வினவ, அரசன் கூறலுற்றான்: “யாம் நாட்டுப் புரவலன். விடியற்போது உன்முகத்து விழித்த பெருவேந்தராகிய எமக்கே உன் முதற்காட்சி தலைப்புண் படுத்துமாயின் நாள்தோறும் உன் அழிமுகத்து விழித்தெழுந்த எங்குடிகள் என்னென்ன பெருங்கேடு உற்றனரோ அறியகில்லேம். மக்கள் பலர்க்கு நலஞ் செய்வான் உன் ஒருத்தனுக்குக் கொலை சூழ்ந்தனம்” என்று அச்செங்கோலன் விளம்பினான். அது கேட்டு, மதி நலம் வாய்ந்த அச்சிற்றிளைஞன், “அமைச்சரீர் கேண்மின் என்முகத்து விழித்தமையால் அரசன் உற்றதோ, தலைப்புறச் சிறுகீறல். அரசன் முகத்து விழித்த யான் உறுவதோ உயிர்க்கொலை. யார் முக விழிப்பு நாட்டிற்குப் பேரழிவு?” என்று துணிச்சலாய் வினவி மீட்சி பெற்றான்.

இச்சிறுபையன் வினா ஒட்பம் காட்டுவது. மக்கள் பால் கல்லாக் குழவிப் பருவத்து ஒளிறும் இயற்கை யறிவெல்லாம் ஒட்பம் எனப்படும்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் (404) என்பது இச்சொல் ஆளப்படும் ஈரிடங்களில் (404, 425) ஒரிடம், கல்லாதான் ஒட்பத்தை, அறிவுடையார் ஏலார் என்றதனால், ஒருவன் ஒட்பம் கல்வியொடு சேர்ந்த வழி அவர் ஏற்பர் என்பது கருத்தாயிற்று. சாணைபிடியா மணிபோல்வது ஒட்பம். அது நூலோடு தீட்டிய வழி - அஃதாவது ஒட்பமும் கல்வியும் இயைந்த புணர்ச்சி - அறிவு என்ற பெயர்க்கு உரித்து. “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு (635) என்ற குறளால் ஒட்பத் தீட்டு வேண்டுவர் ஆசிரியர். ஆவின் இயற்கை யாற்றல் முழுதும் பாலாக மாறிவிடுவதில்லை. அஃதொப்ப, ஒருவன் இயற்கை யறிவாம் ஒட்பம் முழுதும் அறிவாய் ஒருபோதும் மாறுவதில்லை. கல்லா வொட்பக் கூறும், கற்ற அறிவுக்கூறும் ஆகிய இரு நிலையும் ஒவ்வோரளவில் மக்கட்கு உண்டு என்ற காரணத் தால், மதிநலத்தின் மாண்ட அறிவினர் (915) என்றார் ஆசிரியர்,

கல்வி என்பது பிறர் அறிவுத் தொகுதி இறந்த கால நிகழ்காலக் கருத்துத் தொகுதி எள்ளும் பஞ்சும் போல்வது. அறிவு எனப்படுவது வருங்கால முன்னுணர்வு: அவ்வுணர்விலும் மயக்கற்ற நல்லுனர் வாம் என்பது வள்ளுவம். ‘அறிவுடையார் ஆவது அறிவார் (427)