பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 201

தேர்வின் வந்தோர் இற்றை அரசியலின் சிறந்த உறுப்பினர்; இங்ஙன் இங்ஙன் நடக்க வேண்டும் எனக் கழறுதற்கு உரியோர். ஒரு நாட்டு வாழும் அனைவர்க்கும் அரசு ஆளும் உரிமையுண்டு; குடியின் இலக்கணம் தேர்வுரிமை என்பது இப்புது அரசியலின் வாய்பாடு.

பழங்கால அரசியலை நினையுங்கால், வேந்தன் காணும் கடவுளாகக் காட்சியளிக்கின்றான். வேந்துரிமை பிறப்புரிமை, நாடு மன்னனது உடைமை.அரசனே நாட்டிற்கு உயிர். படைகள் அவன் தற்காப்புக்கு உரியன. குடிகள் மன்னன் வாழும் உடல்கள்: ஆளப்படுதற்கு உரியோர்கள். முதன்மையும் சிறப்பும் அரசர்க்கே உரியன. அரசன் நலமே நாட்டு நலம். நாடாட்சி ஒருவனைச் சார்ந்தது. அவனாட்சியிற் குறுக்கிட்டால், கொலையே தண்டனை. அவன் சொல்வது அறம், செய்வது சட்டம்; கேட்பது வரி. வரியிற் பெரும்பகுதி அவன் வாழ்விற்கே செலவாகும். அரசனுக்கேயன்றி, அவன் தேவிக்கும் அன்னோர் சுற்றத்திற்கும் நாடாட்சியில் உரிமையுண்டு. உட்பகை பண்டை அரசியல். அமைச்சு முதலிய வினை கூடப் பிறப்புரிமை.

நாட்டை இடத்தால் பெருக்குவது அரசன் நோக்கம். இகலும் போருமே வெளிநாட்டுக்கொள்கை. பிறவேந்தரி அடிப்பணிவே பெருமை. அவர் இடும் திறையே புகழ்ச் செல்வம். வில்லும் வாளுமே போர்க்கருவிகள். தரைப்படையே பெரும்படை. இருவேந்தர் தம்முட் கண்டு கோடல் அரிய காட்சி. இருநாட்டிடைத் துதுத் தொடர்பு இருந்ததன்றி, மக்கள் தொடர்பு இருந்தது இல்லை; பிறவகைத் தொடர்பும் பெரிது இல்லை. அரசியற் பிணக்கு இருப்பின், உள்ள தொடர்பும் அற்றுவிடும். அரசன் காமமும் திருமணமும் போராக மாறுதலும் உண்டு. அரசாட்சி ஒரு சிலர் உரிமைத் தொழில். நாடும் குடிகளும் ஒரரச குடும்பத்தின் நலனுக்கென ஏற்பட்டவை. ஒருவனாட்சியும் பிறப்புரிமையும் முன்னாள் அரசியல்.

ஞாலம் ஒரு குடும்பம்; மக்கள் ஒரு குடும்ப வுறுப்பினர்: ஆள்வோரும் ஆளப்படுவோரும் வேறல்லர் என்ற பரந்த பொதுப் பேரடிப்படையில் அரசியல் எண்ணங்கள் உருவாவது இக்காலம். தன் குறுகிய நாடே உலகம்; தன் வழித்தோன்றல்களே அரசர்கள் என்ற குறுகிய பிறப்படிப்படையில் அரசியல் இயங்கியது. அக்காலம்.