பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நடை மாந்தீர்!

நல் வணக்கம். திருக்குறளின் உள்ளியல் பற்றி இரண்டும். பொருளியல் பற்றி மூன்றும், அறிவியல் பற்றி இரண்டும், குடியியல் பற்றி ஒன்றும், அரசியல் பற்றி ஒன்றும் ஆக இதுகாறும் ஒன்பான் வள்ளுவச் சொற்பொழிவுகள் ஆற்றினேன். அவற்றிடை எடுத்தாண்ட குறள்களுள் ஒரு சிலவற்றிற்கு நடை நுட்பமும் அவ்வப் போது தெரிவித்தேன். ஆறாவது அறிவுப் பிறப்புத் தலைப்பில் குறித்தாங்கு, திருக்குறள் நடை என்னும் பொருள் களனாக இன்று பொழிவு செய்வேன்.

திருக்குறள் வாழ்வியல் காட்டும் இலக்கண நூலாயினும், காவியம்போல் சுவை பொதுளியது: இலக்கிய நடை பயின்றது; ‘நவில்தொறும் நூல்நயம் போலும் (783) என்றபடி, உவமை நூலாகத் தகுவது. எண் பொருளவாகச் செலச் சொல் (424), திறன் அறிந்து சொல்லுக (644), வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து சொல்லுக (645), நிரந்து இனிது சொல்லுக (648), மாசற்ற சில சொல் (649). கற்றது உணர, விரித்துரை (650) என்ற நடையியலெல்லாம் தனக்கே அமையப்பெற்றது; நம் மொழித்தாயின் தூய்மை, வன்மை, செம்மை, வளமை, தொன்மை, புதுமை, இனிமை முதலாய உண்மைகட்கெல்லாம் சான்றாவது,

அறிவியல் நூல்கள் நிழற்படம் போல்வன: கருத்துக்காட்டும் நடையொன்றேயுடையன; ஆதலின், அவற்றைப் பொருள் குன்றாது ஒரு மொழியிலிருந்து பிறமொழிக்கண் பெயர்த்துக்கொள்ள முடியும். இலக்கியத்தின் அடிப்படை வேறு. கருத்துப்போல் செம்பாக மதிப்பு நடைவண்ணத்துக்கும் உண்டு. கருத்தால் அறிவும் நடையால் சுவையும் பெறுகின்றோம். நடையழகு இல்லா இலக்கியம் நிறவண்ணம் இல்லாச் சோலையையும், மெய்ப்பாடில்லா