பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வள்ளுவம்

யிடங்கள் பலவுளவேனும், தன் துணைமேல் வாழ்ந்துகொண்டே ஒருவன் தன்னை இகழ்வானாயின், அவ்விகழ்வுப் பொறையே தலையிடம் எனத் தெரித்தல் காண்க.

3. எத்துறை நோக்கினும் ஞாலம் இருகூறதாகத் தோற்றம் தருகின்றது. ஒரு கூறு நினையுங்காலை மறுகூறு நினைவிற்கு வருகின்றது! அன்புப் பொருளாகச் சில, முரண் பொருளாகச் சில, அறிவுப் பொருளாகச் சில, இன்றியமையாப் பொருளாகச் சில என வாங்கு, ஒன்றோடு ஒன்றைச் சார்த்தி எண்ணுகின்றோம். பெருமை யொடு சிறுமையையும், இசையொடு வசையையும், மடியொடு குடியையும், ஊக்கத்தொடு ஆக்கத்தையும், இகலொடு பகலையும், பொறுத்தலொடு ஒறுத்தலையும், அருளொடு பொருளையும், கனவொடு நனவையும், ஊடலொடு கூடலையும் திருக்குறள் உடன் வைத்துக் கருத்துத் தொடை செய்கின்றது. கணவன் மனைவி, தந்தை தாய், ஆண் பெண், ஆசான் மாணாக்கன், தலைவன் தொண்டன் என்றவாறு, தொடர்புச் சுட்டுக்கள் ஒருங்கு மனப்படு கின்றன. நன்மை செய்தல் ஒருவன் கடன் எனின், நன்றியறிதல் ஏனையோன் கடனாகும். நாடு காத்தல் மக்கள் கடமை எனின், அன்னோரைக் காத்தல் நாட்டின் கடமையாகும். வரி யிறுத்தல் குடிகள் முறைமை எனின், அவற்றைப் புரத்தல் அரசின் முறை யாகும். இவ்வாறு நாம் இணைத்து நினைக்கின்றோம். இக்கூட்டு நினைவு மனத்தியல்பு. இவ்வியற்கையைக் களனாகக் கொண்டு, அறம் ஒன்று நுதலப் புகுந்த ஒரதிகாரத்துத் தொடர்பான - மறு கூறாய - இணையறமும் விதிப்பர் வள்ளுவர். கேட்டுப் பாராட்டுவான் ஒருத்தன் இருத்தலால் அன்றோ, ஒருவன் பொருளின்றிச் சொற்பந்தல் தொடுக்கின்றான். பயனில சொல்வானை ஒப்பக் கேட்டுப் புகழ்வானும் இழிஞன் என்ற நினைவால், பயனில சொல்லாமை, என்ற அதிகாரத்துப் பயனில கேளாமை யறமும் உடன் கூறுவர். பெற்றோர் கடன் காட்டும் மக்கட்பேறு என்னும் அதிகாரத்துப் பிறந்தோர் கடனும் உடன் மொழிவர். பற்று விடக் கழறும் துறவதிகாரத்து பற்றத் தகும் புதிய பற்றுக் காட்டுவர்.

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் (196)