பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 161

ஒருவன் பிறரொருவரைப் பின்னால் இகழ்ந்தது போலவே முன்னாலும் வெறுப்புக் காட்டிப் பேசினால் அவர் இவனைப் புரிந்துகொண்டு - முன்னெச்சரிக்கையாக விழிப்புக் கொண்டு, தம்மைத் திருத்திக் கொள்ளவும்காத்துக் கொள்ளவும் முடியும். அங்ஙனமின்றி, பின்னால் இகழ்ந்து, முன்னால் புகழ்ந்து சிரித்துக் குலாவினால், அவர் இவனைச் சிறந்த அன்பனாக - நண்பனாக நம்பி, மேலும் வேடிக்கையாகவும் - விளையாட்டாகவும் பல செய்திகளைப் பேசி அளவளாவுவார். அவ்விளையாட்டுப் பேச்சையெல்லாம் இவன் வினைப்பேச்சாக மாற்றி முட்டை கட்டிக்கொண்டு, அவர் இல்லாத விடங்களில் சென்று அவிழ்த்து உதறுவான். இப்படி இவனால் பலவகைகளில் அவர்க்குக் கேடும் இகழும் பெருகும். எனவே, ஒருவன் பிறர்க்கு வேறு தீமைகளைச் செய்தாலும், அவர் விழிப் புடன் இருந்து தற்காப்புச் செய்துகொள்ள முடியும்; ஆனால் இத்தீமையைப் புரிவானேயானால் அவர் ஏமாந்து போவார்; ஆதலின், ஏனையவற்றைவிட இது மிகக் கொடியதாம்.

ஒருவன் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்வதைவிட, சாவே அவனுக்கு நன்மை கொடுக்கும். அதாவது ஒருவன் நீண்ட காலம் புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்ந்தால் அவனுக்கு இருக்கும் புகழ் போவதோடு, மேற்கொண்டு இகழும் உண்டாகும், அவன் குறைவயதுடன் விரைந்து இறப்பானேயாயின், புறங்கூறிப் பொய்க்க முடியாதாதலின், புதிதாக இகழின்றி, இருக்கும் புகழாவது என்றும் நின்று நிலைக்கும். ஆதலின், அவன் உயிர் வாழ்தலினும்