பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 205

விட - ஏன், தேவர்களை விடச் சிறந்தவராவர். நிலவுலகம் மட்டுமன்று - தேவருலகங் கூட, துறவிகளையோ தேவர் களையோ போற்றாமல் இப்புகழ்ச் செல்வர்களையே போற்றும்.

‘நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.” ‘நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு’.

உலகில் சிலர் புகழான செயல்களின் பக்கம் தலை வைத்தும் படுக்காமல், இழிவான செயல்களிலேயே முழு முச்சாக இறங்கி விடுகின்றனர். அதனால் இவர்களை உலகினர் இகழ்கின்றனர். அதற்காக இவர்கள் தம்மை இகழ்கின்றவரை நோகின்றார்கள். இது தேவையில்லையே! புகழ்ச் செயல் புரிபவரை உலகம் புகழத் தவறாது; அது போலவே, இகழ்ச் செயல் புரிபவரையும் உலகம் இகழத் தவறவே தவறாது. இந்த உலகியற்கையை ஒவ்வொரு வரும் உணர வேண்டும். எனவே, இழி செயல் புரிபவர்கள் தம்மை இகழ்பவரை நோகாமல், அவ்விகழுக்குக் காரண மான தங்களைத் தாங்களே நொந்து கொள்ள வேண்டும். ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே (செயலே.) கட்டளைக் கல்’ (உரைகல்) அல்லவா? ‘பெருமையும் சிறுமையும் தான் தரவருமே என்பது பட்டறிந்த முதுமொழியாயிற்றே!

இங்கே சிலர், நாங்கள் என்ன இழி செயல் செய்தோம்? கள், களவு, காமம், பொய், சூது, கொலை, கொள்ளை முதலிய குற்றங்களுள் எக்குற்றம் புரிந்தோம்!