பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வள்ளுவர் இல்லம்

பெற்று வளர்த்துப் பேணி மகிழ்ந்து கல்வியறிவும் தந்து ஆளாக்கிவிட்ட பெற்றோர்க்குப் பிள்ளை செய்யும் உதவி என்ன? இவனைப் பெறுவதற்கு இவன் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ என்று பிறர் தன் கல்வியறிவு, ஒழுக்கம் முதலியன பற்றித் தன் பெற்றோரைப் புகழும் வண்ணம் ஒவ்வொரு பிள்ளையும் நடந்து கொள்ள வேண்டும்.

‘மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்”

இப்பகுதியுள் தந்தை மகளுக்குச் செய்வதென்றோ, தாய் மகனுக்குச் செய்வதென்றோ, மகள் தந்தைக்குச் செய்வதென்றோ, மகன் தாய்க்குச் செய்வதென்றோ குறிப் பிடாமல், தந்தைக்கும் மகனுக்குமே தொடர்பு காட்டி யிருத்தலின், அறிவுடையவர்கள் ஆண்பிள்ளைகள் மட்டுமே என்று கொள்ளலாகாது. அமிழ்தம் உண்டவன் வாழ்வான் என்றால், அமிழ்தம் உண்டவள் வாழ்வாள், உண்டவர் வாழ்வார், உண்டது வாழும், உண்டன வாழும், என மற்றைய பால்களுக்கும் கொள்ளலாம் என்பதை ஒரு மொழி ஒழிதன் இனம் கொளற்கு உரித்தே’ என்னும் நன்னூல் விதி உணர்த்துகின்றதன்றோ? அவ்விதிப்படியே ஈண்டும் மகன் என்றபோதெல்லாம் மகள் என்றும் கொள்ளலாமே!