பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவுரை) ஒரு பெண் தன் இளம்பருவத்தில் பெற்றோரின் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் கணவனின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்வதாகக் கூறுவதியல்பு. அதுபோலவே ஓர் ஆண்மகனும், இளம்பருவத்தில் பெற்றோர் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் மனைவியின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்கின்றான். இம்முறையாக நோக்குங்கால், ஓர் இல்வாழ்வான் ஒருசேரத் தன் பெற்றோரையும் மனைவியையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயக் கடமை உடையவனாய்க் காணப்படுகின்றான் என்பது தெளிவு. பொருட்செறிவுடைய கதையொன்றும் புகலப்படுவது உண்டு நம் நாட்டில்! ஒருநாள் ஒரு விறகுவெட்டி எட்டணா சம்பாதித்தானாம். அவ்வணாக்களை அன்றைக்கே செலவழித்துவிட்டானாம். மெய்தானே! எட்டனா எப்படிப் போதும் ஒரு குடும்பத்திற்கு! ஆனால், அவன் அன்றிரவுதன்பக்கத்து வீட்டுக்காரனிடம் பின்வருமாறுபகர்ந்தானாம். இன்றைக்கு நான் எட்டனா சம்பாதித்தேன். அவற்றுள் இரண்டனாவைப் பழைய கடனுக்காகக் கொடுத்துவிட்டேன். நான்கணாவைக் குடும்பத்திற்காகச் செலவழித்துவிட்டேன். மீதி இரண்டனாவைப் பின்னால் உதவுவதற்காக உண்டிப்பெட்டியில் போட்டுவைத்துள்ளேன் என்பது விறகுவெட்டியின் செலவு விளக்கம். கேட்டான் பக்கத்துவிட்டுக்காரன். வியப்புடன், இக்காலமான காலத்தில் எட்டணா முழுவதுமே போதாதே! அப்படியிருக்கக் கடன் எப்படித் தந்தாய்? மிச்சப்படுத்தியது எப்படி? என்று வினவினான். பின் விறகுவெட்டி, பழைய கடனைக் கொடுத்தல் என்றால், இதற்குமுன் என்னைப் பெற்றுவளர்த்துச் செலவுசெய்து காப்பாற்றிய என் பெற்றோர்க்காக இரண்டனாவை ஒதுக்குதல்; குடும்பத்திற்குச் செலவழித்தல் என்றால் எனக்கும் என் மனைவிக்குமாக நான்கணாவை ஒதுக்குதல் மிச்சப்படுத்துதல் என்றால், எதிர்காலத்தில் காப்பாற்றும் கடமைப்பட்டுள்ள பிள்ளைக்காக இரண்டனாவை ஒதுக்குதல் என்று மேலும் விளக்கம் செய்தானாம். இப்போது விளங்குமே இக்குறட்கருத்து 4 பேரா. சுந்தர சண்முகனார்