பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் புறநானூற்றுப் (191) பொற்பாடலால் அறியலாம். இவ்வரலாற்றால் அறியக்கிடப்பது என்ன? புலவர் அனைவரையும் ஆற்றின் ஒழுக்கினார். தாமும் அறன் இழுக்காது வாழ்ந்தார். அதனால் நோற்பாரைவிட நோன்மை பெற்றார். யோகிகள் யோகவன்மையால் பெறக்கூடிய இளமையை இந்தப் போகி பெற்று வாழ்ந்ததைக் நோக்குங்கள் மேலும், இல்வாழ்வான் உணவு, உடை முதலியன உதவினால்தான் துறவி ஆற்றின் ஒழுகமுடியும் ஆதலின், துறவிகளை ஆற்றின் ஒழுக்குபவனும் அவனே என்பதும் இங்கு நினைவுக்கு வரவேண்டும். மற்றும், துறவிகளின் துறவறத்தவத்தினும் இல்வாழ்வானின் இல்லறத்தவமே எல்லோர்க்கும் பயன்அளிக்கும். ஆதலின் அது உயர்ந்ததுதானே! 9. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அ.தும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. (பதவுரை) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை - அறம் அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதெல்லாம் இல்வாழ்க்கைதான்; அஃதும் - அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல்லாயின் - பிறன் எவனும் பழிப்பதற்கு இடமில்லாதிருக்குமானால் தான், நன்று - நல்லதாகும்- சிறந்ததாகும். (அறன் -அறம்) இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன. உரை) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப் படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. (பரி உரை) இருவகை யறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; ஏனைத் துறவறமோவெனின், அதுவும் பிறனாற் பழிக்கப்படுவதில்லையாயின், அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. வள்ளுவர் கண்ட மனையறம் 29