பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கல்வி, கேள்வி, அறிவு, ஆராய்ச்சி, சொல்வன்மை முதலியவற்றில்) முன்னணியில் இருக்கும்படி, செயல்-செய்வதாம் - அஃதாவது கல்வியறிவு உடையவனாக்குதலாகும். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன. உரை) தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம், அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி உண்டாக்குதல். (பரிஉரை தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது, கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (தெளிவுரை) தந்தை தன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மையாவது கற்றவர் கழகத்தில் அவன் கல்வியறிவில் முன்னணியில் திகழும்படியாகச் செய்தலாம். (ஆராய்ச்சி உரை) ஒரு தந்தை தன் மைந்தனுக்குத் தேடித்தர வேண்டிய பொருள், வீடுவாசலா? நிலம் நீரா? காசு பணமா? அழகிய மணப்பெண்ணா? இல்லையில்லை. இவற்றினும் மேலான கல்வியறிவே ஏனையவற்றை அறவே அளிக்கவேண்டாம் என்றும் சொல்ல வரவில்லை. அவற்றை மட்டும் அளித்துக் கல்வியை அளிக்காமல் விடுதல் கூடாது என்பது இங்குக் கருத்து. ஏன்? ஏனையவை தந்தைக்குப்பின் அழியினும் அழியும். ஆனால், கல்வி அழியாத விழுமிய பொருளன்றோ? இது குறித்தே. "எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்றல்ல பிற" என நாலடியாரும் நவில்கின்றது. 66 பேரா. சுந்தர சண்முகனார்