இது இடைச்செருகல் என்றார்கள் பலர்.
கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை எனும் மூன்று அதிகாரங்களும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவை அல்ல. அவை வள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும்; முந்தைய உரையாசிரியர்கள் காலத்திற்குப் பிற்காலமும் ஆகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவர், பாடிச் சேர்க்கப்பட்டவை என்று நான் கருதுகிறேன் என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1935 ஆம் ஆண்டு, தான் எழுதிய அறத்துப் பால் உரையின் முன்னுரையில் எழுதுகின்றார்.
மறுப்பைக் கூறினாலும், வெறுப்பைக் காட்டாது, கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கும், அவர் தனது உரையை எழுதிச் சென்றிருக்கிறார்.
கடவுள் வாழ்த்து என்பதற்கு கடவுளை வாழ்த்துதல் என்று வ.உ.சி அவர்கள் பொருள் கண்டார்கள். கடவுள் என்பது ஒரு பெயரோ, ஒர் உருவோ பெறாது நிற்கும் மெய்ப்பொருள் என்றார்.
கடவுள் வாழ்த்து என்பதற்கு, பூமியைக் காத்தல் கருதிய வீரக்கழல் வேந்தன் கை கூப்பும் அரி, அயன், அரன் என்னும் மூவருள் ஒருவனை உயர்த்துச் சொல்லியது என, புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது என்று அபிதான சிந்தாமணி ஆசிரியர் ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்கள் கூறுகின்றார்கள்.
பரிமேலழகரும், கடவுள் வாழ்த்து என்பதற்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறையாகலின், இவ்வாழ்த்து அம் மூவர்க்கும் பொது படக் கூறினார் என்று உணர்க’ என்று விளக்கம் தருகிறார்.
பரிமேலழகர் கூறிய விளக்கத்தில் கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக் கொண்ட பொருட்டு, ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்துல் என்கிறார். தான் எடுத்துக் கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டு,