பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


பின்னர் அருளறத்தைத் தம் வாழ்வின் அடிப்படைக் கொள்கையாக மேற்கொள்ளத் தொடங்கியதும், புலால் மறுப்பு அவரை வலிவாகப் பற்றிக் கொண்டது. முன்பு ஊசலாடிக் கொண்டிருந்த இக் கொள்கை அடிகளின் உள்ளத்தில் நிலைபேறு கொண்டது. தென்னாப்பிரிக்காவில் ஓராண்டு பழங்களையே உண்டு அடிகள் உயிர் வாழ்ந்தார்.

அருளறத்தின்பால் அடிகள் கொண்டிருந்த பற்று, பாலையும் புலால் உணவே என்று எண்ணுமாறு செய்தது. பால் ஆவின் குருதியன்றோ? எனவே அதுவும் புலால் உணவு என்று அடிகள் கூறினார். 'பசு மனிதர்களுக்காக மடிசுரந்து பால் கொடுப்பதில்லை. அது தன் கன்றிற்காகவே பாலைக் கொடுக்கிறது. அப்படி யிருக்கும்போது, அதன் பாலை மனிதன் பெறுவது திருட்டு' என்று அடிகள் அருளறம் பேசினார். கல்கத்தாவில் பசுவிடமிருந்து மிகுதியாகப் பால் பெறுவதற்காக மக்கள் செய்த கொடுமைகளையும் வழி முறைகளையும் கேட்டு அடிகள் மிகவும் உள்ளம் வருந்தினார். அதிலிருந்து பல்லாண்டுகள் பால் உண்பதை நிறுத்திவிட்டார்.

கொடும் நோய்வாய்ப்பட்டு அடிகள் வருந்திய போது, 'பாலை உண்டால்தான் நீங்கள் பிழைக்க முடியும்' என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். எனவே மருத்துவர்களின் வற்புறுத்தலுக்காகவும், அன்பர்களின் வேண்டுகோளுக்காகவும் அடிகள் வெள்ளாட்டுப் பாலுண்ண ஒப்புக்கொண்டார். அதிலிருந்து தம் வாழ்நாளின் இறுதி வரையிலும் வெள்ளாட்டுப் பாலே பருகி வந்தார்.