பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. அரசியலும் பொருளாதாரமும்

மக்களினம் நாகரிகம் பெற்ற காலம் தொடங்கி இன்றுவரை அரசியல் முறைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் சிறப்பாகத் தோன்றிய அரசியல் முறை, சிறிது காலத்தில் பயனற்றது - என்று மக்களால் தூக்கி எறியப்படுகிறது. ஆனால் எல்லா அரசியல் முறைகளும், மக்களின் நல் வாழ்வே தம்முடைய குறிக்கோள் என்று பறை சாற்றிக் கொள்கின்றன.

வள்ளுவர் முக்காலமும் உணர்ந்த பேரறிஞர். அவர் வாழ்ந்த நாட்களில் முடியாட்சியே நடைபெற்று வந்தது. ஆனால் மக்களே ஆளும் ஆட்சி எதிர்காலத்தில் வரும் என்பதை அவர் அப்பொழுதே உணர்ந்தார் போலும். அதனால் அரசன் என்றோ வேந்தன் என்றோ குறிப்பிடாமல் பல இடங்களில் 'அரசு' என்று பொதுச் சொல்லால் குறிப்பிட்டுச் சொல்லுகிறார் :

"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு."

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு."