பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

ஏற்ற இடமாக இல்லை. கோவில் வாசலை அடைந்ததும் அழுகிப் போன பூக்குவியலின் நாற்றம் காந்தியடிகளுக்கு நல்வரவு கூறியது. கோவிலின் உட்புறம் நல்ல சலவைக் கல்லால் தளவரிசை போடப்பட்டு விளங்கியது. ஆனால் யாரோ ஒரு பக்தர் அந்தச் சலவைக் கற்களை நடுநடுவே உடைத்து ஆங்காங்கு வெள்ளி ரூபாய்களைப் பதித்திருந்தார். இந்த வெண்பொற்காசுகள் அழுக்குச் சேரும் தூய்மையற்ற பாண்டங்களாக விளங்கின.

கோவிலைச் சேர்ந்த ‘ஞானவாவி’ என்னும் குளத்திற்கு அடிகள் சென்றார். அதைச் சுற்றிலும் குப்பையும் கூளமும் குவிந்து கிடந்தன. காந்தியடிகளுக்கு இவையனைத்தும் மிக்க ஆத்திரத்தை அளித்தன. அந்த ஆத்திரத்தை வாவிக்கரையில் இருந்த பண்டாவிடம் காட்டினர். கோவில் குருக்களின் வேலையும், புரோகிதரின் வேலையும் சேர்த்துச் செய்கிறவர்களுக்குக் காசியில் ‘பண்டாக்கள்’ என்பது பெயர். பண்டாவிற்குக் காணிக்கை கொடுக்க அடிகளுக்கு மனம் வரவில்லை. இதற்கு அறிகுறியாக ஒரு காசு கொடுத்தார். ஆத்திரமடைந்த பண்டா, ‘நீ நேரே நரகத்துக்குப் போவாய் என்று சபித்ததோடு, அடிகள் அளித்த காசையும் வீசி எறிந்தார்.

காந்தியடிகள் இதனால் மனங் கலங்கவில்லை. ‘என்னுடைய கதி எப்படி வேண்டுமானலும் ஆகட்டும். குருவாகிய தாங்கள் இப்படிப் புன் மொழி பேசுதல், தங்கள் தகுதிக்கு ஏற்றதன்று. வேண்டுமென்றால் காசை எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதுவும் போய்விடும்’‘’ என்றார்.