பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

முடியாது’ என்று அடிக்கடி கூறுவார் ; ‘கிலாபத்’ இயக்கத்தின் சமயப்போராட்டத்தை அரசியலோடு இணைத்துக்கொண்டார். அரசியலைச் சமயக் கண் கொண்டு நோக்கும் அடிகளின் கொள்கை, பல அரசியல் வாதிகளுக்குப் பிடிக்கவில்லை. பண்டித நேரு கூட, ‘காந்தியடிகளின் இக்கொள்கை எனக்குப் பிடிக்கவில்லை; புரியவுமில்லை’ என்று பல இடங்களில் கூறியிருக்கிறார். அரசியல் காரணங்களுக்கு மட்டுமல்லாமல், இயற்கையின் கொடுமைகளுக்குக் கூடச் சமயத்தையே அடிகள் சான்று காட்டிப் பேசுவார். ஒருமுறை வட இந்தியாவில் பெரும் நில நடுக்கம் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் கொள்ளை கொண்டது. அதுபோழ்து, கோடிக்கணக்கான இந்து சகோதரர்களைத் தீண்டாதவர்களாகச் சேரியில் நாம் ஒதுக்கி வைத்துள்ள பாவத்திற்கு, இறைவன் அளித்த தண்டனையே இந்நில நடுக்கம்’ என்று அடிகள் கூறினர். இக்கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று நேரு எண்ணினார்; எண்ணியதோடு அமையாமல் பத்திரிகைகளிலும் எழுதினார்.

ஆனால் காலம் செல்லச் செல்ல அடிகளின் கொள்கை இந்திய அரசியல்வாதிகளுக்குப் பழகிப் போய்விட்டது. இது சிறந்த ஒரு கொள்கையாகவும் பட்டது. காந்தியடிகளின் சமயக் கொள்கைகள் வெறும் ஆன்மிகத்தின் அடிப்படையில் மட்டும் அமையாமல், சமூகம், அரசியல், பொருளியல் ஆகிய பலவற்றின் அடிப்படையில் அமைந்தவை. அத்தகைய அடிப்படைகளை